புலிகளுக்கெதிரான போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என இலங்கையின் ஊடகங்கள் எதிர்வுகூறியது போல நடைபெறவில்லை

indiaflagபுலிகளுக்கெதிரான போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என இலங்கையின் ஊடகங்கள் எதிர்வுகூறியது போல நடைபெறவில்லை. அது ஒரு நீண்ட யுத்தமாகி விட்டது. அதற்கும் அப்பால் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை போர் பலி கொண்டு வருகிறது.

இதுவரை ஊடகங்களுக்கும் மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கும் போர்ப்பிராந்தியத்துடன் தொடர்புகொள்ள ஒரு வழியுமில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்புக்களின் தகவலின்படி அப்பிராந்தியத்தில் இரண்டு இலட்சம் மக்கள் அகப்பட்டுள்ளனர். எனினும் அரசாங்கத்தின் புள்ளிவிபரம் வெறும் ஐம்பதாயிரம் தான் எனத் தெரிவிக்கிறது. அங்கிருக்கும் மக்கள் சுத்தமான குடிநீரையோ உணவையோ மருந்துகளையோ பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பணிப்பின் பேரில் இலங்கைக்கு சென்றிருந்த ஜோன் ஹோம்ஸ் அங்கு நாளாந்தம் டசின் கணக்கில் மக்கள் கொல்லப்படுதாகவும் பலநூற்றுக்கணக்கானோர் படுகாயமடைவதாகவும் தெரிவித்திருந்தார்.

போருக்குள் அகப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பலமுறை இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமெனக் கோரப்பட்டது. இலங்கை அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளைக் கண்டும் காணாதது போல விட்டு விட்டது.  

கொழும்பு விரக்கமின்றித் தனது இராணுவ தந்திரோபாயத்தையே தொடர்ந்து கடைப்பிடித்து பிரபாகரனைச் சரணடையச் செய்யவே விரும்புகிறது.

மறுபுறத்தில் போர்ச் செலவை அதிகப்படுத்தும் வகையில் புலிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் பாதிக்கப்படுவது பற்றி அவர்கள் ஒரு போதும் கவலை கொண்டதில்லை. அவர்களுடைய கவனம் முழுக்க முழுக்க இலங்கை அரசாங்கத்தை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி போர்க்குற்றங்களைச் சுமத்துவது தான்.  (இந்தச் சூழ்நிலையின் முரண்நகை என்னவென்றால் இந்தியா உட்படப் பலநாடுகள் தமிழ் மக்களின் போராட்டத்தின்பால் அனுதாபம் கொண்டுள்ள போதிலும், அவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதற்குத் தயங்குவதற்குக் காரணம் தமிழ் மக்களின் போராட்டத்தை புலிகள் தம் கைகளுக்குள் வைத்திருப்பது தான். தமிழ் மக்களுக்கு ஆதரவளிப்பது என்பது புலிகளுக்கு ஆதரவளிப்பதாகப் பார்க்கப்படும் என எண்ணப்படுகிறது.)

மிக மோசமானது என்னவென்றால் இந்தப் போர்ப்பிராந்தியத்திலிருந்து தப்பி வரக் கூடிய தமிழர்கள் புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் இருக்கும் ஒரு வகை இனக்கொலை முகாம்களில் தடுத்து வைக்கப்படுவது தான்.  ஒரு கொடுங்கோல் அரசனுக்குக் கீழ் வாழ்வதை விட காட்டில் காட்டு மிருகங்களுடன் வாழ்வது  பறவாயில்லை என் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை அங்குள்ளது. இது எவ்வளவு மோசமான உண்மை.
 
இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு தனக்கு அயலில் தென்பகுதியில் இவ்வாறான ஒரு மாபெரும் மனித அழிவு நடந்து கொண்டிருக்கும் போது எவ்வாறு மௌனமாக இருத்தல் இயலும்?

இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை. அவ்வாறான ஒரு உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவதற்கு சில எல்லைகள் இருக்கின்றன என்றவாறான அறிக்கைகளை இந்தியா தொடர்ந்து விடுத்துக்; கொண்டிருக்க முடியுமா? நியூடெல்லி சென்னை ஆகியவற்றின் கொள்கை வகுப்பாளர்கள் அயலுறவுக்கொள்கை பற்றி இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தல்; வேண்டும்.

இறைமை என எடுத்துக் காட்டப்படுவது எல்லையில்லாதது அல்ல. இறைமை என்பது கொல்வதற்கான உரிமையை அளிப்பது அல்ல. எதிர்மறையாக சூடானிய அறிஞர் பிரான்ஸிஸ் டெங் குறிப்பிடுவது போல இறைமை கட்டுப்பாட்டை எடுத்துக்காட்டுவது அல்ல. அது பொறுப்புணர்வை வெளிப்படுத்துவது.

அரசு தனது கடப்பாட்டிலிருந்து தவறுமானால் அல்லது அதனைக் காப்பாற்றுவதற்கான தகுதி இல்லாமற் போகுமானால் அதற்கு அடுத்தாக உள்ள சர்வதேச சமூகம் அதனைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆகவே எங்காவது ஒரு அரசாங்க எல்லைக்குள் மனிதத்தின் மேல் இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை பெருமளவிலான படுகொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் இடம் பெறுமானால் அங்கு உடனடியாகவே ஒரு சர்வதேச தலையீடு மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இவ்வாறான சம்பவங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.   

அரசியல் ராஜதந்திரம் சட்டம் மற்றும் பொருளாதாரம் என்று பாதுகாப்பதற்கான கடப்பாடு (Responsibility to Protect ‐ R2P) பல வடிவங்களை உள்ளடக்கியுள்ளது. இவ்வானறான எல்லா வழிவகைகளும் தோல்வியடையும் பட்சத்தில் சர்வதேச சமூகம் அதன் இறுதி உபாயமாக இராணுவ வழிமுறையையும் கைக்கொள்ள முடியும்.

கடந்த தசாப்தத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாடு (RP2) என்பது ஒரு உத்வேகத்தைப் பெற்றிருந்தது. எனினும் துரதிர்ஸ்டவசமாக 9‐11க்குப் பிறகு அது பின்னடைவைச் சந்தித்தது. அதன்பிரதிவிளைவாக பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுதல் என்பது முன்னணிக்கு வந்தது.  அதேவேளை இது சர்வதேச ரீதியாகப் பயன்படும் ஒரு வழிமுறையாக 2005இல் ஐ.நாவின் பொதுச்சபையில் அங்கீகாரத்துக்குள்ளானது. மனித உரிமைகைளை மீறுவதில் பெயர் பெற்ற சீனா, ரஸ்யா, சூடான், சிம்பாவே போன்ற சில நாடுகள் மட்டும் இந்த பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டினை (RP2) எதிர்த்து வந்தன.

இலங்கையின் இன்றைய நிலைமை மிகக் கொடுரமானது. தமிழர்கள் மிக மிலேச்சத்தனமாகக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வைத்தியசாலைகள் மீதும் பாதுகாப்பு வலயத்துள்ளும் குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னரே சுட்டிக்காட்டியதைப் போல இனவதை முகாம்களுக்குள் மக்கள் ஆசைகாட்டி இழுத்து வரப்பட்டுள்ளார்கள். மோதல்கள் அற்ற பிரதேசங்கள் கூட அருவருக்கத்தக்க சூழலை நோக்கி மாறி வருகின்றன.

அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் காணாமல் போகிறார்கள். தடுத்து வைக்கப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். சுதந்திரமான ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இவையெல்லாம் இலங்கையை ஒரு நரகமாக மாற்றி விட்டுள்ளன. மறுபுறத்தில் மனிதாபிமானமற்ற புலிகள் வன்னிக்காடுகள் ஜுலியன்வாலாபாக் ஆக மாறுவதையிட்டு ஒரு துளி கண்ணீர் கூட சிந்துபவர்களாக இல்லை.

தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த மனித உரிமை மீறல்களுக்கெதிராக சர்வதேச அபிப்பிராயத்தைத் திரட்டும் நடவடிக்கைகளை இந்தியா முன்னின்று  உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன். 

கொழும்பும் புலிகளும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என அழுத்தத்தினை கட்டாயமாகப் பிரேரிக்க வேண்டும்.  போர்ப்பிராந்தியத்திலிருந்து மக்களை விடுவிக்க அவர்கள் சர்வதேச விதிமுறைகளைப பின்பற்ற நெருக்கடி கொடுக்க வேண்டும். அத்தோடு ஐநாவின் நிர்வாகத்தின் கீழான நலன்புரி நிலையங்களில் இந்த மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும்.

இலங்கையில் நேரக்குண்டொன்று வெடிப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனைத் தடுப்பதற்கு இந்தியா தேவையான நடவடிக்கைகளை முன்னின்று முன்னெடுக்காது விட்டால் உலகிலேயே மிக மோசமான படுகொலைக்களமாக இலங்கை ஆகிவிடும். இந்தியா உடனடியாகப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் அயலிலுள்ளவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக்  கொண்டிருக்கும் போது மகாத்மாவின் தேசம் மௌனம் காத்தது என்று எதிர்காலச்சந்ததியினர் குற்றம்சாட்டும் நிலைமை உருவாகிவிடும். 

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு அமெரிக்கக் கறுப்பினக் கவிஞன் எழுதினான்: எவ்வளவு தான் தாங்கொணாத வலியோடு கூடிய வரலாற்றோடு வாழ்ந்திருந்தாலும் அந்த வரலாற்றில் நாம் வாழ்ந்தமையை மறுதலிக்க முடியாது. எனினும் துணிவுடன் எதிர்கொள்வோமாயின் அத்தகைய வலிமிகு வரலாற்றை நாம் மீளவும் வாழ வேண்டிய தேவை ஏற்படாது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.