அதிமுகவுடன் சேருவது ஈழத் தமிழர்களுக்கு விரோதமானது – திருமாவளவன்

thiruma-200அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்வது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியைத் திருமாவளவன் மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், பா.ம.க. குறித்தும் பேசப்பட்டது.

திருமாவளவனுடன் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணிக்குப் போவதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

அவர் கூறுகையில்,

“இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராகப் பேசியவர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும், விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என்றெல்லாம் தமிழ் இனத்திற்கு எதிராகப் பேசியவர் ஜெயலலிதா.

ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவதுபோல, உண்ணாவிரதம் என்ற ஒருநாள் கூத்தை நடத்தினார். அ.தி.மு.க., தி.மு.க.வுடன் ஒப்பிட முடியாத கட்சி. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அ.தி.மு.க. நேர் எதிரான கட்சி.

அ.தி.மு.க. கூட்டணியில் சேர்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு, எங்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பா.ம.க.வுக்கு அழைப்பு விடுத்தோம். அந்த தீர்மானத்தையும் விலக்கிக்கொண்டு, நேற்று இரவு நீண்ட நேரம் டாக்டர் ராமதாசை சந்தித்துப் பேசினேன். அப்போது, தோழமை உரிமையுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தேன்.

ஒரே அணியில் இருந்தால் சமூக எழுச்சியை வளர்க்க முடியும் என்று அப்போது நான் கேட்டுக்கொண்டேன். எங்கள் கோரிக்கையை புறந்தள்ளாமல், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி கூறுவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

சூசகமாக என்னை அ.தி.மு.கவுக்கு அழைத்தார். தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.கவினர் வருவர் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது. எங்களை அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு டாக்டர் ராமதாஸ் அழைக்கவில்லை. பா.ம.கவுடன் வர சூசகமாக அவர் அழைத்தார். நாங்கள் தற்போது தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். அணி மாறுவது குறித்து எந்த ஊசலாட்டமும் எங்களிடம் இல்லை.

சிதம்பரம் தொகுதியில் பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகளும் தனித்தனி அணியில் நின்று போட்டியிட நேரிட்டால், எங்களுக்குள் போட்டிதான் இருக்குமே தவிர, மோதல் இருக்காது.

நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 2 தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என மொத்தம் 3 தொகுதிகளை ஒதுக்கித்தர முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தி.மு.கவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை அடிப்படையிலான உறவு கொண்டதை முதலமைச்சர் கருணாநிதி கடந்த வாரம் அறிவித்தார். தேர்தல் கூட்டணிக்காக இல்லாமல் சாதி ஒழிப்பு, சமத்துவ கொள்கை ரீதியில் பெரியார், அண்ணா வழியில் செயல்படுவதை முதலமைச்சர் கருணாநிதி அப்போது சுட்டிக்காட்டினார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த பாராட்டு மடலாக கருதுகிறேன்.

கூட்டணி உறவை மனப்பூர்வமாக ஏற்று, மகிழ்ச்சியோடு தேர்தலைச் சந்திக்கிறோம். ஈழத்தமிழர் ஆதரவுக்காக எங்கள் குரல் வலுவாக ஒலிக்கும். இலங்கை தமிழர்கள் வாழ்வுக்காக தி.மு.க. எவ்வளவோ செய்துள்ளது. அதற்காக எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்துள்ளது.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, பிரதமரைச் சென்று சந்தித்தது, மனிதச்சங்கிலி நடத்தியது போன்றவற்றில் முதலமைச்சர் கருணாநிதி முன் நின்றார். இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ள தி.மு.கவுடன் தேர்தல் உறவு வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.