மொன்றியலில் கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கலாநிதி பிறைன் செனிவிறட்ன தலமையில் கருத்தரங்கு

img_1701அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த கலாநிதி பிறைன் செனிவிறட்ன தலைமையில் “இலங்கையில் தமிழர்களுக்கு நீதியான சமாதானம்” என்னும் தலைப்பில் வரலாற்றுப் பின்னனியுடன் கூடிய சமகாலக் கருத்தரங்கு நடைபெற்றது.

இலங்கையில் நடைபெறுவது கல்விப்படுகொலை பொருளாதாரப் படுகொலை மதப்படுகொலை கலாச்சார படுகொலை அடங்கலான திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலை என்பதை வரலாற்றுச்சான்றுகளுடன் ஆதார பூர்வமாக எடுத்து விளக்கினார்.

சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட சமாதான முயற்சிகள் போலியானவை என்றும் கிளிநொச்சி நகர்மீதான இராணுவ ஆக்கிரமிப்புடன் சமாதான முயற்சிகளுக்கான இறுதிக்கதவையும் இறுக்கி மூடிய சிங்களதேசம் தமிழர்களை தனி நாடு நோக்கிய பயணத்தில் விரைவாக பயணிக்கச் செய்திருக்கின்றது என்றும் கூறினார்.

தமிழீழம் நோக்கிய பயணத்தில் தமிழ் இளையோரிற்கு இருக்கும் வரலாற்றுக்கடமையை எடுத்து விளக்கியதோடு இலங்கையில் தமிழர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாற்று உண்மைகளை அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அத்துடன் சிறிலங்காவின் பொருட்கள் சேவைகளை புறக்கணிப்பதுடன் சர்வதேச ரீதியாக சிறிலங்கா பெற்று வரும் நிதி உதவிகளை தடுத்து நிறுத்தி சிறிலங்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்தலும் புலம்பெயர் தமிழர்களின் காலக்கடமையில் முக்கிய அம்சங்களில் ஒன்றெனவும் எடுத்துக்கூறினார்.

தமிழர்களை ஆயுதமேந்த நிர்ப்பந்தித்த ஆளும்வர்க்கம் இன்று தனித்தமிழீழம் என்னும் நிரந்தரத் தீர்வை நோக்கியும் நகர நிர்ப்பந்தித்துள்ளது. அத்துடன் சரத்பொன்சேகா மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச ரஜீவ விஜயசிங்க ஆகியோரின் தீவீரமான தமிழ் இனப்படுகொலைச் செயற்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்தி தமிழ் ஈழவிடுதலையை விரைவாக்கி தமிழ் உறவுகளை காக்கும்படி வேண்டிக்கொண்டார்.

அத்துடன் மாணவர்களுக்கு வரலாற்று ரீதியாக இலங்கையில் நடந்து வரும் பல்வேறு அடக்குமுறைச் சம்பவங்களை எடுத்து விளக்கியதுடன் மாணவர்களின் பல்வேறு வகையான வினாக்களிற்கும் விடையளித்தார்.

கனடியத் தமிழர் பேரவையின் மொன்றியல் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச்சேர்ந்த தமிழ் மற்றும் வேற்று இன மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.