யாழ். முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்களுக்கு உடுதுணிகளுக்கே பஞ்சம் : நல்லைக் குரு முதல்வர்

u3_dp_larg100வன்னிப்பகுதியிலிருந்து யாழ்க் குடாநாட்டிற்கு சென்று முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தற்போது பிரதானமாக உடுதுணிகளுக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்று திரும்பிய நல்லைக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமஸ்சுந்தர பரமாச்சாரி சுவாமிகள் தமிழ் நியூஸ் இணையதளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நேற்று குடாநாட்டைச் சேர்ந்த இந்துமதப் பெரியார்களைக் கொண்ட குழுவொன்று முதன்முறையாக கோப்பாய், குருநகர் மற்றும் கைதடிப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்கு நேரடியாக விஜயம் செய்தது.

நல்லைக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமஸ்சுந்தர பரமாச்சாரி சுவாமிகள் தலைமையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான நல்லெண்ணப் பிரமுகரான எஸ். பரமநாதன் மற்றும் சிவமகாலிங்கக் குருக்கள் கிருபானந்தாக் குருக்கள், சமூக அபிவிருத்தி மன்றத்தைச் சேர்ந்த திருமதி ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினரே அங்கு விஜயம் செய்திருந்தனர்.

பொதுமக்களுடன் இவர்கள் கலந்துரையாடினர். அவ்வேளையில் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கான போசாக்குணவுகள், உடுபுடவைகள், மருந்துவகைகள் என்பன பிரதானமாகத் தேவைப்படுவதாகவும் ஆண்கள், பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஒட்டுமொத்தமாக உடுதுணிகள் தேவையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கணிசமானவர்கள் ஒரு மாற்றுடையுடனேயே வந்திருப்பதால் அவர்களுக்கு போதியளவு உடுதுணிகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என நல்லைக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமஸ்சுந்தர பரமாச்சாரி சுவாமிகள் மேற்படிச் செவ்வியில் தெரிவித்தார்.

இதனிடையே பல குடும்பப் பெண்கள் தமது குழந்தைகள் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பாக கற்றல் செயற்பாடுகளுக்கான உபகரணங்களை வழங்கினால் முகாம்களிலேயே தாம் தமது குழந்தைகளுக்கான கல்வியறிவை ஊட்டக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் காரணமாக வருடக் கணக்கில் பல குழந்தைகள் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்பதாகத் தெரிவித்த அவர்கள், பாடசாலைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு முன் முகாம்களில் தாமே கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குக் கல்வி உபகரணங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே குடாநாட்டிலுள்ள வர்த்தகர் சமூகமும் பொதுமக்கள் பலரும் இணைந்து பல மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை நேற்று அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் மிருசுவிலிலுள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் கொடிகாமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முகாம்களில் உள்ளவர்களைச் சந்திப்பதற்கு செல்லவுள்ளதாகவும் நல்லைக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமஸ்சுந்தர பரமாச்சாரி சுவாமிகள் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.