நானும் சரி- தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை’

e0ae95e0aeb0e0af81e0aea3e0aebee0aea8e0aebfe0aea4e0aebf1இறையாண்மையை காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை அலட்சியப்படுத்த நானும் சரி- தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை’ என்று டாக்டர் ராமதாசுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- “இறையாண்மை” என்ற சொல்லைக் கூறி- இலங்கை தமிழர்களுடைய பிரச்சினையை இந்திய அரசு தட்டிக் கழிப்பதைப் போல- இப்போது அந்த இறையாண்மை என்ற சொல்லை தமிழக முதல்-அமைச்சரும் சொல்லத் தொடங்கி, அந்த பிரச்சினையை கைகழுவி விட்டார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

பதில்:- இறையாண்மை, ஒருமைப்பாடு இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத் தான்- அவற்றுக்கு மாறாக செயல்பட்டாலோ, பேசினாலோ,
எழுதினாலோ சட்டம் கொட்டும் என்று ஒரு நிலை உருவாக்கப்பட்டிருப்பதால் தான் அறிஞர் அண்ணாவே, “வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்” என்ற உவமையைச் சொல்லி- திராவிட நாடு பிரிவினைக்கே முற்றுப்புள்ளி வைத்தார் என்பது வரலாறு.

பிரிவினையைக் கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று அண்ணா அன்றைக்கு சொன்னதின் அடிப்படையிலே தான் தமிழகம் வளம் பெறவும்- வடமாநிலங்களோடு போட்டி போட்டுக்கொண்டு எல்லா துறையிலும் முன்னேறவும்- டெல்லி அரசோடு விவாதித்து மாநிலங்களின் தேவைகளை இன்றைக்கு பெற்று வருவதுடன் மாநில சுயாட்சிக்கும் உரத்த குரல் எழுப்பி வருகிறோம்.

இறையாண்மையைக் காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை மறுக்கவோ, மறைக்கவோ, அலட்சியப்படுத்தவோ நானும் சரி- என் தலைமையிலே உள்ள தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை. டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கை பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள- காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு அணியிலே உள்ள தளகர்த்தர்கள், சேனாதிபதிகள், வழிகாட்டிகள்- இவர்கள் எல்லாம் இப்போது சமீப காலமாக இலங்கையிலே உள்ள முல்லைத்தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி பற்றியோ பேசுவதில்லை. அவர்களுடைய பிரச்சினை எல்லாம் திருநெல்வேலி தொகுதி யாருக்கு? திருச்சி தொகுதி யாருக்கு? சிதம்பரம் தொகுதி யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? ராஜ்ய சபையும் சேர்த்தா? சேர்க்காமலா? இவைகளைப் பற்றித்தான் சேர, சோழ, பாண்டிய வீரர்கள் அல்லும், பகலும் ஆராய்ச்சி செய்து- அவைகளைப் பெறவும், தரவும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அலையில் நம்மைப் பார்த்து இலங்கை தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.

அவர்கள் வாதப்படி நாம் கை கழுவி விட்டவர்கள்- அல்லது கையாலாகாதவர்கள்- இவர்கள்தான் இலங்கை தமிழர்களைக் காப்பாற்றும் அந்த கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள்- முழங்கட்டுமே முரசம்- கொட்டட்டுமே பேரிகை. இலங்கை நோக்கி ராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! ராஜபக்சேயை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?

ஒரு நாள் பகல் இரவு 24 மணி நேரத்தில்- 20 மணி நேரம் தொகுதிப் பங்கீடு- அட்வான்சாக ராஜ்ய சபா- இப்படி பேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு இலங்கை தமிழர் பிரச்சினை என்றாலே ஒரு “வீரம்” அல்லவா “பொசுக்”கென வந்து விடுகிறது. உடனே பூகம்பமாக வெடித்துப் புயலாக சீறி- மத்திய ஆட்சியிலே இருக்கும் காங்கிரஸ் மீதும் கனல் கக்குகிறார்கள்- தமிழகத்திலே இருக்கும் கழக ஆட்சி மீதும் தணல் கொட்டுகிறார்கள்.

அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய (?) நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம். இந்த இலங்கை மீது படையெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு- அவரையும் அழைத்து செல்லுங்கள். அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று- அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.

எச்சரிக்கை. அவர் தவறிப்போய் 2002-ம் ஆண்டு சட்டமன்றத்திலே முதல்-அமைச்சராக இருந்து முன் மொழிந்து நிறைவேற்றினாரே ஒரு தீர்மானம்- தளபதி பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவோமென்று- அதை நினைத்து ராஜபக்சேவுக்கு பதிலாக பிரபாகரனை கைது செய்து விடப்போகிறார். எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:- மேடையேறி இலங்கை தமிழர்களைப் பற்றி பேசினால் இந்த அரசு “இறையாண்மை” என்று சொல்லி, அவர்களை கைது செய்து விடுகிறது என்று ஒரு பிரசாரம் நடைபெறுகிறதே? அதிலும் குறிப்பாக அந்த பிரசாரத்தில் கலைத்துறையினர் ஈடுபடுகிறார்களே?

பதில்:- கலைத்துறையினர் என்றால் அவர்களுக்கு இனப்பற்று இருக்கக் கூடாதா என்ன? தேசப்பற்று இருக்கக் கூடாதா என்ன? ஆனால் ஒன்று. மேடையேறி பேசுகின்றவர்களையெல்லாம் “இறையாண்மை” மீறுகிறார் என்று காரணம் காட்டி தமிழ்நாட்டில் யாரும் கைது செய்யப்படவில்லை. சொல்லப் பட்ட காரணங்களில் இறையாண்மைக்கு விரோதம் என்பதும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அப்படி கைது செய்யப்பட்டவர்களுடைய பேச்சை தயவு செய்து தமிழ்நாட்டு மக்கள் படிக்கத் தெரிந்தவர்கள் படித்துப் பார்க்கட்டும்.

காவேரி தண்ணீரைக் கொண்டு வர முடியாதவர்கள் எல்லாம் “வேசி மக்கள்” என்றும்- இத்தாலியில் சர்வாதிகாரி முசோலினி இறந்துவிட்டான், ஆனால் சேலை கட்டி வந்த முசோலினிதான் சோனியா என்றும்- ராஜீவ்காந்தி கொலை செய்யப்படவில்லை, அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்றும் இப்படியெல்லாம் பேசுவதுதான் மேடை நாகரிகம்- அரசியல் பண்பாடு என்று கருதினால்- அப்படி பேசியவர்கள் கைது செய்யப்பட்டது நியாயம் அல்ல என்று நீங்கள் வாதிடுவதிலே எந்த பயனும் இல்லை.

கேள்வி:- அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை டெல்லியில் தான் இருந்தது. இப்போது சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்-அமைச்சரின் கருத்து எடுத்துக்காட்டுகிறது என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே நடைபெற்ற நேரத்தில்- தம்பி பரிதி இளம்வழுதி இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஒரு கவனஈர்ப்பு தீர்மானத்தை அவையிலே எழுப்ப முனைந்தபோது- அதற்கு அனுமதி மறுத்து அ.தி.மு.க. அரசின் சார்பில் பேசிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா- இலங்கை பிரச்சினையிலே இந்தியா தலையிட முடியாது- அது ஒரு அயல் நாட்டு பிரச்சினை என்று பேசி அது இன்றும் நடவடிக்கை குறிப்பிலே இருக்கிறதே, அதை டாக்டர் ராமதாஸ் வசதியாக மறந்து விடலாமா?

கேள்வி:- எதற்கெடுத்தாலும் மேற்குவங்க மாநிலத்தை ஒப்பிட்டு பார்க்கும் படியும், அங்கே முன்னேற்றங்கள் அதிகம் இருப்பதாகவும் கம்ஞ்னிஸ்டு கட்சியினர் கூறுவது உண்மைதானா?

பதில்:- 23-3-2009 தேதிய “பிசினஸ் வேர்ல்ட்” என்ற ஆங்கில இதழில் இதைப்பற்றி ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், “இந்திய நாடு விடுதலை அடைந்த போது மேற்கு வங்க மாநிலம் மிகவும் தொழில் மயமாக்கப்பட்ட மாநிலமாக திகழ்ந்தது. 1961-ம் ஆண்டில் அந்த மாநிலத்தில் 7 லட்சத்து 18 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தனர். 2005-ல் அந்த எண்ணிக்கை சிறிது அதிகமாகி 8 லட்சத்து 94 ஆயிரம் என்ற அளவிற்கு தொழிலாளர்கள் பெருகியிருந்தனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 86 ஆயிரம் என்பதிலிருந்து 12 லட்சத்து 36 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 95 சதவிகிதம் குழந்தைகள் மேற்கு வங்கத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்ட போதிலும், அதிலே 78 சத விகிதம் குழந்தைகள் இடையிலேயே நின்று விடுகிறார்கள். அதற்கு காரணம், பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதும், ஆசிரியர்களின் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சாரப்படி இல்லாததும்தான்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும், நோய்வாய்ப்படுபவர்களின் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அதிகமாக உள்ளது. மராட்டியம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுடன் மேற்கு வங்கத்தை ஒப்பிடும்போது மேற்குவங்கத்தில் அதிக எண்ணிக்கையிலான கொலை குற்றங்கள், கற்பழிப்பு குற்றங்கள், கடத்தல் குற்றங்கள் நிகழ்கின்றன. 2008-ம் ஆண்டில் 57 சதவீத மேற்குவங்க மக்களுக்குத்தான் சாலை வசதிகள் உள்ளன.

அது மராட்டியம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலே உள்ளதை விட பத்து சதவிகித அளவிற்கு குறைவாகத்தான் உள்ளது. மராட்டியத்திலும், தமிழகத்திலும் 70 சதவீத மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில் 28 சதவிகித பேருக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நான் கூறவில்லை. ஆங்கில இதழ் ஒன்றிலே வெளிவந்த தகவலைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.