ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம்;உறுதி செய்யும் முயற்சியில் பிரிட்டன் தீவிரம். அந்நாட்டு அமைச்சர் நாடாளுமன்றில் தகவல்

00004558a417_538a82ae_0000255f_03c0ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை நிலைவரம் குறித்து முழுமையான விளக்கமொன்று அளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடு பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்தது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கையில், அந்த நாட்டின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அமைச்சர் பில் ரம்மெல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையுடனும் பொதுநலவாயத்தில் உள்ள எமது சகாக்களுடனும் தொடர்ந்தும் பேச்சுகளை மேற்கொண்டு வருகிறார்.

எமது வெளிவிவகார அமைச்சர் இந்தச் சபையில் பல தடவைகள் குறிப்பிட்டமை போன்று இலங்கையின் வட பகுதியில் மோதலில் சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்பே எமது முன்னுரிமையாகவுள்ளது.

இந்த நிலைமைக்கு முடிவு காண்பதற்கு இலங்கை அரசுடனும், சர்வதேச சகாக்களுடனும் தொடர்ந்தும் இலங்கை நிலைவரம் குறித்து பாதுகாப்புச் சபையில் முழுமையான விளக்கவுரையொன்று நிகழ்த்தப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாக ஜோன் ஹோம்ஸ் உரையாற்றியதை நாங்கள் வரவேற்கிறோம். பாதுகாப்புச் சபையில் உள்ள எமது சகாக்களுடன் தொடர்ச்சியாக இலங்கை நிலைவரம் குறித்து விவாதித்து வருகிறோம். அவர்களுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. பிரிட்டிஷ் அரசு இலங்கையின் மனிதாபிமான நிலைகுறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. குறிப்பாக மோதலில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் நிலைபற்றிக் கவலையடைந்துள்ளது.

கடந்த ஜனவரியிலிருந்து இலங்கை இராணுவம் கண்டுள்ள முன்னேற்றம் காரணமாக இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மாத்திரமல்ல அப்பாவிப் பொதுமக்களும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் சுதந்திரமாக செய்தி வெளியிட இயலாமையால் உறுதியான புள்ளி விவரங்களைப் பெறமுடியாதுள்ளது. எனினும், ஐக்கிய நாடுகள் சபை 2ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்டும், 7 ஆயிரத்து 200 பேர் காயமடைந்துமுள்ளனர் எனவும் மதிப்பிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் அச்சமடைய வைக்கின்றன.

காஸாவில் நிகழ்ந்ததை எவரும் நியாயப்படுத்த முடியாது. அதேவேளை, இந்த விடயத்தில் புள்ளிவிவரங்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஒவ்வொருநாளும் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.