அரசாங்கத்தின் வேலை முடிந்தவுடன் கூலி படைகளுக்கு என்ன நடக்குமென்று எங்களுக்கு தெரியும் – என். ஸ்ரீகாந்தா

srikantha-mpதமிழ் தேசியத்தின் நீண்டகால அபிலாஷைகளை தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கத்தினால் இரண்டு கூலிப்படைகள் ஏவப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் வேலை முடிந்தவுடன் அந்த கூலிப்படைகளுக்கு என்ன நடக்குமென்று எங்களுக்கு தெரியும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

மேற்கே மன்னார் முதல் கிழக்கே பொத்துவில் வரையிலும் பரந்து விரிந்து கிடக்கின்ற எமது இனத்தின் மரபுவழி தாயகத்தை வடக்கென்றும் கிழக்கென்றும் பிரித்து பார்க்க முடியாது. ஆனால் இனவாதிகளுக்கும் தமிழினத்தின் துரோகிகளுக்கும் அது தனித்தனியாகவே தெரியும் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; எமது பிரச்சினைக்கு மாகாண சபை முறைமையானது தற்காலிக தீர்வேயன்றி நிரந்தர தீர்வல்ல என்பதுடன் இலங்கை தீவிற்குள் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

ஜனாதிபதி என்ற சொற்பதத்தை ஆளுந்தரப்பில் சிலர் பயபக்தியுடன் பயன்படுத்துகின்றனர். இதேபோல தான் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் ஜனாதிபதி சொற்பதத்தை பயபக்தியுடன் பேசினர்.

ஆனால் இறுதியில் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் இரவோடு இரவாக கையெழுத்திட்டனர்.

ஒருவர் மீது அளவுகடந்த முறையில் முகஸ்துதியை செய்கின்றவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அரசாங்கத்தினால் பிளவுபடுத்தப்பட்ட இரண்டு குழுக்களும் கிழக்கில் விபசார அரசியலை மேற்கொண்டுவருக்கின்றன.

கிழக்கில் சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படும் நாடகமாகும். சிங்கள மக்களை அங்கிருந்து விரட்டிவிட்டு தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

கிழக்கு மாகாண சபையை நிர்வகிக்கின்ற கட்சி பட்டப்பகலிலேயே கடத்தல்களில் ஈடுபடுகின்றது. சட்டவிரோத குழுக்களின் இரும்பு பூட்சுகளுக்கிடையில் மூவின மக்களும் துன்பப்படுகின்றனர். நான்கு ஆயுதங்களை கையளித்து விட்ட குழுவிடம் 40 ஆயுதங்கள் இருக்கும் என்று அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். கருணாவிடம் ஆயுதம் இல்லை என்றால் அரசாங்கத்தினால் நம்பமுடியுமா?

தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுவதற்கு தார்மீக தகுதியில்லை என்பதனால் கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதையிட்டு நான் பாராட்டுகின்றேன். அவருக்கு இனி தமிழ் தேசிய உணர்வு இல்லை என்பது புலப்பட்டுவிட்டது. தமிழ் மக்களின் தாயகத்தின் வரலாற்று கடமையை நிலைநாட்டுவோம். எதிர்வரும் காலங்களில் கிழக்கு தமிழ் ஆசனங்களையும் நாம் பெற்றே தீருவோம்.

வவுனியாவிலுள்ள அகதி முகாமிற்கு விஜயம் செய்திருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அங்குள்ள ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்தார். அதனை ஊரெல்லாம் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமாயின் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தமொன்று செய்து கொள்ளப்படல் வேண்டும் என்பதுடன் மக்கள் விடுதலை முன்னணி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.