மகிந்தவிடம் பிடித்து கொடுத்து தமிழ் மக்களை கொலை செய்ய துடிக்கும் உலக நாடுகள் இன அழிப்பை துரிதப்படுத்த திட்டம்

0011இலங்கையில் ஒரு மனிதாபிமான போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. மோதலில் சிக்குண்டுள்ள மக்களின் நிலை குறித்து அது விடுதலைப் புலிகளைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.  உத்தியோகப்பற்றற்ற ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டமொன்றின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய

ஐ.நா. மனிதாபிமானப் பணிகளுக்கான தலைவர் ஜோன் ஹோம்ஸ், விடுதலைப் புலிகளால் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் குறித்தே தாம் பிரதானமாக அக்கறை கொள்வதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் மோதல்கள் நடைபெறும் வடபகுதிக்கு மனிதாபிமான பிரசன்னம் அனுமதிக்கப்படவேண்டும் என்று தான் அழுத்தம் கொடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“இதைச் சாத்தியமாக்கும் வகையிலும், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாகவும் ஒரு வகையான மனிதாபிமான போர்நிறுத்தத்தை நாம் முன்மொழிந்துள்ளோம்” என்றார் அவர்.

“இது மிகவும் கவலையளிக்கும் ஒரு நிலைமை. அதனால், பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியே அனுமதிக்கவேண்டும் என நாம் விடுதலைப் புலிகளிடம் முதலில் கோரிக்கை விடுக்கிறோம்” என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

எறிகணைத் தாக்குதல்களை நிறுத்துக! – அமெரிக்கா

இலங்கையின் மனிதாபிமான நிலைமைகள் குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் ஆழ்ந்த அக்கறையை இங்கு வெளியிட்ட அமெரிக்காவின் மூத்த ஐ.நா.வுக்கான பிரதிநிதி றொசெமேரி டிக்கார்லோ, விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், அந்த அமைப்பு அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை நாம் நாம் நிச்சயமாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்த அவர், “ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, வன்முறையைக் கைவிட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லுமாறு நாம் அவர்களைக் கோருகிறோம்” என்று வலியுறுத்தினார்.

பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் எறிகணைத் தாக்குதல்களை நடத்துகின்றமைக்காக இலங்கை அரசாங்கத்தைத் தாம் கண்டிப்பதாகவும் டிக்கார்லோ மேலும் குறிப்பிட்டார்.

எறிகணைத் தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருப்பதாகத் தெரிவித்த அவர், “ஆனால் அது நிறைவேற்றப்படுவதைக் காண்பதற்கு நாம் விரும்புகிறோம்” என்று வலியுறுத்தியதுடன், பொதுமக்களைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மனிதாபிமானச் சட்டத்தை மதியுங்கள் – ஐக்கிய இராச்சியம்

வடக்கில் பொதுமக்களின் அவல நிலைக்கு புலிகளைக் குற்றஞ்சாட்டிய ஐ.நா.வுக்கான ஐக்கிய இராச்சியப் பிரதிநிதி ஜோன் சாவேர்ஸ், “மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறவிடாமல் விடுதலைப் புலிகளே தடுத்து வருகின்றனர்” என்று குற்றஞ்சாட்டினார்.

“அவர்களது இந்தச் செயற்பாடை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இரண்டு தரப்புக்களும் மனிதாபிமான சட்டத்தை மதித்து, கனரக ஆயதங்களின் பயன்பாட்டைக் கைவிட்டு பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க அனைத்தையும் செய்யவேண்டும்” என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

புலிகள் இணங்கினால் நாம் தயார்! – இலங்கை

பொதுமக்களின் நிலை குறித்த அக்கறையை தமது அரசாங்கமும் பகிர்ந்துகொள்வதாக இங்கு தெரிவித்த ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹகார, இலங்கை அரசாங்கம் 48 மணிநேர போர்நிறுத்தக் காலத்தை அறிவித்தமையைச் சுட்டிக்காட்டினார்.

புலிகளே பொதுமக்களை வெளியேறவிடாமல் தடுத்துவருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், “பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதற்கு புலிகள் இன்று சம்மதித்தாலும், அதற்கு வசதியாக தற்காலிக போர்நிறுத்தம் ஒன்றைச் செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“முரண்பாட்டுக்கு முடிவுகாணும் துரிதமான வழி புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து பொதுமக்களை வெளியேற விடுவதுதான்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பெரும்பாலான பகுதிகளை விடுதலைப் புலிகள் இழந்துவிட்டதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல, புலிகள் விரைவில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிடுவர் என்று குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் இப்போது அரசாங்கம் பாதுகாப்பு வலயமாக அறிவித்த பகுதி உள்ளிட்ட சுமார் 21 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

1990களிலிருந்து இலங்கைத் தீவின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், தீவின் மூன்றில் இரண்டு பகுதி கரையோரப் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த விடுதலைப் புலிகள், அண்மைய மோதல்களில் இதில் பெரும்பாலான பகுதிகளை இலங்கைப் படையினரிடம் இழந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.