விமான தாக்குதலுக்கு புலிகள் தயார்

sky_tigers-222x3001விடுதலை புலிகள் வசம் இன்னும் ஒரு விமானம் இருப்பதாக இலங்கை உளவுத் துறையினரும் நேரில் பார்த்தவர்களும் கூறி உள்ளனர். இதனால் புலிகள் மீண்டும் விமான தாக்குதல் நடத்தலாம் என்று அச்சத்தில் கொழும்பு முழுவதும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை ‘தி டெய்லி மிரர்‘ என்ற பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

விடுதலை புலிகளிடம் குண்டு வீச்சு விமானங்கள் இருப்பது 2007ம் ஆண்டு புலிகளின் 2 விமானங்கள் தலைநகர் கொழும்பு அருகே உள்ள கட்டுநாயகே விமானப் படை தளத்தில் குண்டு வீசிய போதுதான் தெரிய வந்தது. அதன் பிறகு 8 முறை புலிகளின் விமானங்கள் பல்வேறு ராணுவ நிலைகள், அரசு அலுவலகங்கள் மீது குண்டு வீசியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி வவுனியா விமானப்படை தளத்தில் குண்டு வீசிய போது புலிகளின் விமானம் ஒன்று இலங்கை ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதன் பிறகு புலிகளுக்கு எதிரான தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தி அவர்களை முல்லைத் தீவில் முடக்கியது. புலிகளின் 7 விமான தளங்களையும் கைப்பற்றியது. அதன் பிறகும் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி புலிகளின் 2 விமானங்கள் கொழும்பில் உள்ள விமானப்படை தலைமையகத்திலும் கட்டுநாயகே விமானப்படை தளத்திலும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி விட்டு விழுந்து நொறுங்கின. இந்த 2 விமானங்களும் நெடுஞ்சாலையை ஓடு பாதையாக பயன்படுத்தி கிளம்பியதாக கூறப்படுகிறது.

தற்போது விடுதலை புலிகளை முல்லைத் தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் 20 சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் முடக்கி விட்டதாக ராணுவம் கூறுகிறது. இந்த நிலையிலும் புலிகள் வசம் ஒரு விமானம் இருப்பதாகவும், குடிசைக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் அது பறக்கும் நிலையில் இருப்பதாகவும் உளவுத் துறையினரும் கூறி உள்ளனர்.

இந்த தகவலை ‘தி டெய்லி மிரர்‘ என்ற பத்திரிகை வெளியிட்டு உள்ளது. தவிர புலிகள் நவீன உதிரிபாகங்களை வரவழைத்து புதிய விமானத்தை உருவாக்கி வருவதை ராணுவம் கண்டு பிடித்து இருப்பதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

அதனால் புலிகள் மீண்டும் விமான தாக்குதல் நடத்தலாம் என்று அச்சத்தில் கொழும்பு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளன. புலிகளின் விமானப்படை தளபதியாக பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.