சிறீலங்காவின் தென் பகுதிகளில் கடற் புலிகள் தாக்கலாம்

normal_photo272சிறீலங்காவின் தென் பகுதிகளை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்குதல் நடத்த வாய்புள்ளதாக சிறீலற்காவின் கடற்படை அச்சம் வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்றய தினம் தெற்கு கட்டளை பீடத்திற்கு சென்ற சிறீலங்காவின் கடற்படைத்தளபதி அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை அவதானித்ததுடன், பாதுகாப்பை பலப்படுத்தும் திட்டங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார்.

கடந்த 2006 ஆண்டு இறுதியில் கிழக்கு மாகாணம் சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் தெற்குப்பகுதிக்கான அச்சசுறுத்தல் இனி இல்லை என சிறீலங்கா பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தவேளை விடுதலைப்புலிகள் காலித் துறைமுகத்தினுள் புகுந்து பெரும் சேதத்தினை ஏற்படுத்திய வெற்றிகர தாக்குதல் ஒன்றினை நடத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகளிடம் உள்ள கடல் பகுதி மிகக் குறுகிய அளவாக இருக்கின்ற போதிலும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து வருவதை சிறீலங்கா கடற் படையினர் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த 26ஆம் நாள் வட தமிழீழத்தின் கரையோர கடற்படைத் தளங்களுக்கு சென்றிருந்த சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்திருந்தார்.

வான் புலிகளது நடவடிக்கைகள் முற்றாக முடக்கப்பட்டிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சு பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில், கொழும்பில் வான் புலிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.