வணங்காமண்” கப்பல் செவ்வாயன்று இலண்டனிலிருந்து வன்னி நோக்கிப் புறப்படும்

vanangaa-mann-banner1வன்னியில் அவலப்படும் மக்களுக்கு அவசர உதவியாக 400 மெற்றிக் தொன் மருந்து மற்றும் உணவுப் பொருள்களுடன் “வணங்கா மண்” கப்பல் எதிர்வரும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வன்னி நோக்கிப் புறப்படுகின்றது.

மனிதாபிமான உதவிகளை அனுப்பும் அமைப்பான “ஏசிரி”யின் பணிப்பாளர் கிரஹாம் வில்லியம் சன்ஸ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி மத்திய இலண்டனில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வை அடுத்து “வணங்காமண்” முதலாவது பயணத்தை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஆரம்பிக்கும்.

இந்த நிகழ்வில் புலம் பெயர்ந்த மக்களுடன் பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆண், பெண் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கப்பல் பயணத்தை ஆரம்பித்து வைப்பார்கள்.

பிரிட்டனில் பல்வேறு நகரங்களில் புலம்பெயர் மக்கள் அன்பளிப்புச் செய்த மருந்துப் பொருள்களும் உணவுப் பொருள்களுமாக 400 மெற்றிக் தொன் எடுத்துச்செல்லப்படும். அவசர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளே அதிக அளவில் எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மனிதாபிமான உதவிப் பொருள்களை எடுத்து வரும் கப்பல் முல்லைத்தீவுக்குச் செல்ல வசதியாக அது சென்றடையும் நாளில் போரை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் (சர்வதேச மட்டத்திலான) கோரிக்கை ஒன்று விடுக்கப்படும்.

கப்பல் பிரிட்டனிலிருந்து புறப்படும் வேளையில் அந்தச் சர்வதேசக் கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.