கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 3 வெவ்வேறு தாக்குதல்களில் 6 அதிடிரப்படையினர் பலி; 8 பேர் படுகாயம்

ltte-2012081மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் நேற்றும், நேற்று முன்தினமும் மேற்கொண்ட மூன்று வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 6 அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். முதலாவது தாக்குதல் சம்பவம் மட்டக்களப்பு-பதுளை வீதியில் உறுகாமம், கித்துல் பகுதியில் வீதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடி மீது  வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலில் ஒரு அதிரடிப்படை வீரர் கொல்லப்பட்டார். மேலும் 3பேர் படுகாயங்களுக்குள்ளாகினர்.

இரண்டாவது தாக்குதல் சம்பவம் செங்கல்லடி-பதுளை வீதியில் 78 வது மைல்கல்லில் அமைந்துள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் மினி முகாம் மீது நேற்று சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட நேரக்கணிப்பு குண்டுத் தாக்குதலில் 2 அதிரப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மூன்றாவது தாக்குதல் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலில் 3  அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இத்தகவல்களை மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டம் 16 ம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பொறிவெடித் தாக்குதலில் 2  சிறிலங்கா இராணுவ ஊர்காவல் படையினர் தமது கால்களை இழந்துள்ளனர் என அம்பாறை மாவட்ட விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.