அதிகரிக்கும் அத்துமீறல்களால் ஆடிப்போகும் மன்னார்

29_03_2009_014_003_014முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியாக இருந்துவரும் மன்னார் நகரில் அவ்வப்போது இடம்பெற்று வரும் அசம்பாவிதங்கள், மற்றும் படுகொலைச் சம்பவங்கள் நிம்மதியாக உலாவித்தி?யும் மக்களின் இயல்பு நிலையை சடுதியான மாற்றத்திற்கு கொண்டு செல்வதாகவே தெரிகின்றது.

இருபத்துநான்கு மணிநேர ரோந்து நடவடிக்கைகளும் சுற்றிவளைப்புகளும் சல்லடைத் தேடல்களும் ஆயுததாரிகளின் இயல்பான நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

இந்நிலையில் என்றும் இல்லாதவாறு மன்னாரில் தற்போது கப்பம் கோரி அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அச்சுறுத்தல்கள் மூலம் வெற்றுக் காசோலைகளில் பலவந்தமாக கையொப்பம்பெற்று தமக்கு வேண்டிய தொகைகளை எழுதிக்கொள்ளும் நபர்கள் இயல்பாக நடமாடித்திரிய பணத்தைப் பறிகொடுத்தவர்களோ பதுங்கித்திரியவேண்டிய அவலநிலை மன்னாரில் தொடர்ந்து கொண்டிருப்பதாகவே சொல்லப்படுகின்றது.

வன்முறையாய் வரவழைக்கப்பட்டு வாங்கப்படும் கப்பங்களால் வாய்பிளந்து வானம் பார்க்கும் கும்பலாக வர்த்தக சமூகமும் ஏனையோரும் எத்தனை காலங்களுக்கு முதுகெலும்பை தொலைத்துவிட்டவர்களாய் அலைந்து திரியப் போகின்றார்கள் என்பதையும் அவரவர்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இது இவ்வாறிருக்க கடந்த 24ஆம் திகதி மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளிவாசல் பகுதியில் இரவு வேளை இனந்தெரியாத ஆயுததாரிகளால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளிவாசல் வீதியால் 7.00 மணியளவில் மேற்படி இளைஞர் வேலை முடிந்து கால்நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதவர்களே இவர்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேற்படி துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்து பிரதேச வாசிகள் மன்னார் பொது விளையாட்டரங்கில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புத் காப்புத் தரப்பின?டம் தெ?வித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் இருந்த செல்வராசா கின்சிலியை முச்சக்கர வண்டியின் உதவியோடு மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்து சென்றிருக்கின்றனர்.

அவசர சிகிச்சைக்காக சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒருசில நிமிடங்களில் அவர் உயிரிழந்திருக்கின்றார்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பொலிஸாரும் இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் எவரும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை.

சம்பவ தினத்தை அடுத்து மறுநாள் காலை மேற்படி சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த மன்னார் மாவட்ட நீதிபதி அ.யூட்சன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தையும் பார்வையிட்டு மரண விசாரணைகளையும் மேற்கொண்டார்.

மரண விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி அ.யூட்சன் பிரேத ப?சோதனையின்பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மன்னார் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததற்கமைய மேற்படி சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டு இறுதிக்கி?யைகளும் இடம்பெற்று முடிந்திருக்கின்றது.

மூர்வீதி காட்டுப்பள்ளிவாசலை வசிப்பிடமாகக் கொண்ட சுட்டுக்கொல்லப்பட்ட 29 வயதான செல்வராசா கின்சிலி மன்னாரில் உள்ள இரும்பு ஒட்டுவேலைக் கடை ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்றும் எதுவித சமூக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர் என்றும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் நகர பொது விளையாட்டரங்கு இராணுவ முகாம் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க மன்னார் நகரில் சீருடையில் சென்ற மோட்டார் சைக்கிள் குழுவினரால் பொதுமக்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படும் சம்பவங்களும் மன்னார் நகரில் அவ்வப்போது இடம்பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு வேளை மன்னார் பள்ளிமுனை பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகளுக்கூடாக மூன்று மோட்டார் சைக்கிளில் சீருடையில் சென்ற குழுவினர் வீதிகளில் பயணித்த பாதசாரிகள், மற்றும் வாகனத்தில் பயணித்தவர்களை இடைமறித்து கேள்விகள் எதுவுமின்றி கடுமையாக தாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு ஏழு மணி தொடக்கம் எட்டு மணிவரையான ஒருமணிநேர இடைவெளியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சீருடை அணிந்த ஆறு பேரினால் பல இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றமை மன்னார் நகரில் அச்ச நிலையை தோற்றுவித்திருக்கின்றது.

இது இவ்வாறிருக்க வீதியால் பயணித்த முச்சக்கர வண்டியொன்று அதே குழுவினரால் துரத்திப் பிடிக்கப்பட்டு அதன் சாரதியும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றார்.

மேற்படி சம்பவங்களில் ஈடுபட்ட சீருடை அணிந்த மோட்டார் சைக்கிள் குழுவினர் சம்பவ தினமன்று இரவு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அதிவேகமாக தமது மோட்டார் சைக்கிள்களை செலுத்தியதாகவும் மது போதையில் இருந்ததாகவும் சம்பவங்களை நேரில் அவதானித்தவர்கள் மன்னார் பொலிஸ்நிலையத்திற்கு தகவல்களை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க மன்னா?ல் சமீப காலங்களாக இலங்கை இராணுவத்தினர் தமது செயற்பாட்டை முழு அளவில் விஸ்தரித்திருக்கின்றனர்.

தினமும் சுற்றிவளைப்புக்கள், தேடுதல்கள், கைதுகள் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் நாள்  முழுவதும் உந்துருளிகளில் படைத்தரப்பினர் முகத்தை மறைத்துக் கொண்டு நிறமூட்டப்பட்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்ட தலைக்கவசம் அணிந்த நிலையில் அதிவேகமாக மன்னார் நகரின் பிரதான வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதி வீதிகளிலும் இரவு பகலாக சுற்றித்திரிகின்றனர்.

 இராணுவத்தினரும் பொலிஸாரும் குழுக்கள் குழுக்களாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் பாதசாரிகள், வாகனங்கள், துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றில் பயணிப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு உடல் பரிசோதனை, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பரிசோதனை மற்றும் பொருட்கள் பரிசோதனை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனால் வீணான காலதாமதம் ஏற்படுகின்றதே தவிர அசம்பாவிதங்களை தோற்றுவிக்கும் எவரும் அகப்படுவதில்லை.

இது இவ்வாறிருக்க மன்னாரின் நகர்ப்பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல புதிய தடைமுகாம்களும் காவலரண்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதியில் அமைந்திருந்த காவலரண் தற்போது விஸ்தரிக்கப்பட்டு இராணுவ முகாமாக மாறியிருக்கின்றது.

இம்முகாமில் இருந்து தலைமன்னார் வீதியில் ஏறத்தாழ 500 மீற்றருக்கு அப்பால் உள்ள புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை அண்மித்து மற்றுமொரு புதிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள இம்முகாமில் இருந்து ஏறத்தாழ 600 மீற்றருக்கு அப்பால் கடற்படை முகாம் ஒன்றும் அமைந்திருக்கின்றது. தலைமன்னார் மன்னார் வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மேற்படி இரண்டு முகாம்களிலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் பயணிகள் கூடுதலான அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இதுதவிர மேற்படி கடற்படை முகாமில் வாகனங்களில் இருந்து இறக்கப்படும் பயணிகள் தன்னியக்க புகைப்படக்கருவிகள் மூலமான கணனி மயப்படுத்தப்பட்ட பதிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது நூற்றுக்கணக்கானோர் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது சிவில் நிர்வாக உத்தியோகஸ்தர்கள், கிராம உத்தியோகஸ்தர்களின் பிரசன்னம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றபோதும் மன்னார் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின்போது எந்தவொரு கிராம உத்தியோகஸ்தர்களும் சம்பவ இடத்திற்கு பெரும்பாலும் சமூகம் அளிப்பதில்லை என பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மை நாட்களாக மன்னார் நகரம் மிகவும் பதற்ற நிலைக்குள்ளானதாகவே காட்சியளிக்கின்றது. பொதுப் போக்கு வரத்துக்கள் அனைத்தும் மாலை 6.30 மணிக்கு முன்னதாகவே நிறுத்தப்படுகின்றன. இதனால் வர்த்தக நிலையங்களையும் குறிப்பிட்ட நேரத்திலேயே மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

சிவில் நிர்வாகத்தின் நடைமுறையின் சிகரமாகிய சட்டமும் ஒழுங்கும் ஸ்த்திரமானதாக இருக்கின்ற போதும் கப்பம் அறவிடுகின்றவர்களும் அச்சுறுத்தல்களை விடுப்பவர்களும், ஆயுததாரிகளும் சுதந்திரமாக உலாவித்திரிவது சிவில் நிர்வாகத்தின் கண்கள் மீது மண்ணைத் தூவிவிட்டார்களோ என்றே எண்ணத்தோன்றுகின்றது.

ஒன்றுக்கொன்று சமாந்தரமாய் அதிக?த்துச் செல்லும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அடிமைத்தனமும் அச்சுறுத்தல்கள் மூலமான அட்டகாச அடாவடித்தனங்களும் மன்னார் மக்களை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடப்போவதில்லை என்பதையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளிவாசல் பகுதியில் கடந்த 24ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற பகுதியை மன்னார் மாவட்ட நீதிவான் அ.யூட்சன் பார்வையிடுகின்றார்.

மன்னார் நகரில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளில் படையினரும் பொலிஸாரும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.