அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ரீ.என்.ஏ ‐ நிராகரித்தது மிகச்சரியான அரசியல் முடிவு ‐ மனோகணேசன்

manoganesan21_thumb2நியாயமான தீர்வெதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்தது மிகச்சரியான அரசியல் முடிவு என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்; 20 வருடங்களுக்கு முன்னாலேயே தமிழர்களால் நிராகரிக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை வடக்கு கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தேசிய சிக்கலுக்கு தீர்வாக திணித்து விடலாம் என்ற அபிப்பிராயத்தை தமிழ் மக்களால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நூற்றுக்கு மேற்பட்ட கூட்டங்களை அமைச்சர் திஸ்ஸவிதாரண தலைமையிலான சர்வகட்சி மாநாட்டின் கட்சி பிரதிநிதிகள் குழு நடத்தியுள்ளது. இக்குழுவில் 90 விகிதமான விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு ஏற்பட்டு விட்டது என அமைச்சர் கூறிவருகிறார். இது உண்மைக்கு புறம்பானது. அடிப்படை விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு சர்வகட்சி குழுவில் கிடையாது.
 
இந்நிலையில் முந்தைய ஆண்டில் இக்குழுவினால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு ஒரு மாற்றுத் திட்ட யோசனை அறிக்கையை தயாரித்து அரசாங்கத்திடம் கையளித்தது. இந்தக் குழுவிலே தமிழ், முஸ்லிம்களை விட சிங்கள அங்கத்தவர்களே அதிகம் இருந்தார்கள். இருந்தாலும், இந்த குழு வெளியிட்ட யோசனைகள் வரவேற்கத்தக்கவை.

இந்த யோசனைகளை தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியுமென்று அரசாங்கம் அச்சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்திருந்தது. இதற்கான உறுதிமொழி புதுடில்லியில் வைத்து இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்டது.

இந்த உண்மையை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ஆனால், கொழும்பு திரும்பியதுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தீவிரவாத கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த யோசனைத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது. இன்று பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக குறைந்தபட்சம் இந்த யோசனை திட்டங்களையாவது அறிவித்து அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், அரசாங்கம் அதை செய்யவில்லை.

இது சம்பந்தமாக இந்திய அரசாங்கமும் முன்னுக்குப்பின் முரணாக கருத்து வெளியிடுவதைத் தவிர எதுவுமே செய்வதாகத் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.