போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் ‐ ஐ.நாவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு அழுத்தம் ‐ சர்வதேச தரப்பு தகவல்கள்

unoபோர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையும் பிரித்தானியாவும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சர்வதேச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்ப் பகுதிகளில் பொது மக்கள் சிக்கியுள்ளமை குறித்து விடுதலைப்புலிகள் மீது குற்றம்சுமத்தியுள்ளதுடன் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான முனைப்புகளை மேற்கொள்ள போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் சபை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதித் தூதுவர் ரோஸ் மேரி டிகாலோ, அரசாங்கப் படையினரால் பாதுகாப்பு வலயப் பகுதியில் மக்கள் தங்கியுள்ள பிரதேசங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதில்லை என வழங்கப்பட்ட உறுதிமொழியை பாதுகாக்க அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம்சுமத்தியிருந்தார்.
 
அத்துடன் பொதுமக்கள் தங்கியுள்ள பகுதிகள் மீது நடத்தப்படும் எறிகணைத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறும் அவர் அரசாங்கத்திடம் அழுத்தமாக கோரிக்கை விடுத்திருந்தார். விடுதலைப்புலிகள் பொதுமக்களை பணயமாக வைத்திருப்பதை அமெரிக்கா கண்டிப்பதாகவும் அதேபோல் அரசாங்கம் மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் வெளியேறவும் அவர்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் உடனடியாக தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் ரோஸ் மேரி டிகாலோ தெரிவித்திருந்தார்.

இங்கு உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தூதுவர்  பாதுகாப்பு வலய பகுதியில் படையினர் தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக கூறியுள்ளார். அரசாங்கப் படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தூரத்தை விட படையினர் மிக அருகில் சென்றுள்ளனர்.

பாதுகாப்பு வலய பகுதிகளில் இருந்து புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் மேற்கொண்ட போது சில பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். எனினும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.