அரச இணையங்களின் புருடா மீண்டுமொருமுறை அம்பலம்

nerudal-tamil-newsஇராணுவ செய்தி இணையத்தளத்திற்கும், இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்திற்கும் இடையிலான மோதல் தொடர்பான செய்திகளிடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதனால் மக்கள் பெரிதும் ஏமாற்றமடைவதுடன் அரசின் பொய் பிரசாரமும் அம்பலமாகியுள்ளது.

இரண்டு செய்தி இணையத்தளங்களும் அரச ஊடகங்களாக இருந்த போதும், மோதல்கள் தொடர்பில் இரண்டு இணையத்தளங்களிலும் வெளியிடப்படுகின்ற செய்திகளில் வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களில் இந்த இரண்டு இணையத்தளத்தினாலும் வெளியிடப்பட்டிருந்த தகவல்களின் படி, 835 தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவ செய்தி இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இதேகாலப்பகுதியில் 1174 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ இணையத்தளதைவிட பாதுகாப்பு செய்தி இணையத்தளம் 41 சதவீத அதிகரித்த அளவிலான தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு ஊடகங்களும் அரச ஊடகங்களாக இருந்த போதும், எண்ணிக்கை ரீதியான இந்த பாரிய வேறுபாடு, மோதல்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டு வரும் பொய் பிரசாரத்தினை காட்டி நிற்கிறது.

அத்துடன் பாதுகாப்பு செய்தி இணைத்தளத்தினால் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ‘இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக” கூறப்பட்டிருக்கும்.

ஆனால் இராணுவ இணையத்தளத்தின் ஒரு அறிக்கையிலேனும், குறிபார்த்து அல்லது இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்காது.

அத்துடன், இராணுவ இணையத்தளம் தமது அறிக்கைகளில், குறிப்பிட்ட சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும்.

எனினும் பாதுகாப்பு இணையத்தளம், அந்த குறிப்பிட்ட சம்பவத்தில் 5 அல்லது 10 விடுதலைப் புலி உறுப்பினர்களேனும் கொல்லப்பட்டதாகவே சுட்டிக்காட்டியிருக்கும்.

இந்த அதிகரித்த எண்ணிக்கை மற்றும் கருத்து வேறுபாடுகள், இந்த அறிக்கைகளை எழுதுபவர்கள் சுயமாக கதைகளை தோற்றுவிக்கின்றமையினையும், புதிதாக சொல்ல கதைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் பழைய கதைகளையே மீள சுழற்றுவதும் நிரூபணமாகிறது.

எவ்வாறாயினும், இந்த தகவல்களை பிரயோகிக்கும் மக்கள், ஏமாற்றப்படுகின்றனர் என்பதே உண்மை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.