உணர்ச்சிவசப்படுவதனால் புலம்பெயர் நாடுகளில் அமைதி வழிப் போராட்டம் திசை திரும்பும் ஆபத்து

20_02_09_swiss_04தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புலம்பெயர்ந்த தமிழீழத் தமிழர் அமைதி வழிப் போராட்டங்களை தொடராகச் செய்து வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் அதிகமாகவே மக்களின் வருகை பல நாடுகளிலும் காணப்படுகின்றது.

இருந்த போதும் சில குறைகள் இருப்பதனை நாம் கவனத்தில் எடுப்பது போராட்டம் செய்வதிலும் முக்கியமானதாகத் தெரிகின்றது.

தமிழீழம் தான் தமிழீழத் தமிழரின் ஆழ்மன விருப்பம் என்ற நிலையில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று உலகத் தமிழரின் விருப்பமும் தமிழீழம் தான் என்ற நிலையை எட்டியுள்ள இன்றைய காலத்தில் உலகின் பல நாடுகளும் தமிழீழ மக்களின் நிலை பற்றிப் பரவலாகப் பேசுகின்றன.

அரசியல் நோக்கத்திற்காக தமிழீழத்தை தீண்டத்தகாதவொன்றாக சில நாடுகள் தவறான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கலாம். அவற்றை உடைத்து தமிழரின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஏற்க வைப்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் செய்யப்படும் போராட்டம் போதுமானதாகத் தெரியவில்லை.

வெளிநாடுகளில் வாழும் தமிழருக்குச் சட்டங்கள் தெரியாதா?

ஒரு காலத்தில் படித்தவர்கள் பெரும் வர்த்தகப் புள்ளிகள் தான் வெளிநாடுகளுக்கு வந்தார்கள். இலங்கைத் தீவிற்குள் தமிழருக்கு உயிர் வாழ்வதற்கு அச்சம் ஏற்பட்ட நிலையில் சொந்த மண்ணில் வாழ முடியாது போனதால் தான் தமிழீழத் தமிழர் புலம்பெயர்ந்தனர்.

இப்படி வெளிநாடுகளிற்கு வந்தவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களில் சட்டங்களை மதித்து நீதிக்குப் புறம்பாய் எதுவும் செய்யக்கூடாதென்று முடிவெடுக்கின்றனர். சட்ட ஆலோசனைகளைப் பெற்று ஒவ்வொரு விடயங்களையும் செய்கின்றனர்.

திருமணம், மகப்பேறு, புதுமனை வாங்குதல், மகிழூர்தி வாங்குதல், குடும்ப விழாக்களைச் செய்தல் அனைத்திலும் சட்டதிட்டங்கள் கவனிக்கப்படும்.

வீடு வாடகை கொடுத்தல், தொழில் செய்யுமிடத்தில் கவனமாக இருத்தல் என்று எதனையும் அவதானமாகவே செய்கின்றவர்கள், தமிழீழ விடுதலைக்கான அமைதி வழிப் போராட்டங்களில் மட்டும் சட்டங்களை மதிக்காமல் நடந்து கொள்வது ஏன்?.

போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு வருவதற்கே தொழில் செய்யும் இடங்களில் இருந்து சட்டத்திற்குட்பட்டு முன்கூட்டியே விருப்பை எடுத்துத் தான் வருகின்றீர்கள்.

அப்படி வந்த நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குள் பாய்வேன் என்று ஆவேசப்படுவதில் அர்த்தமில்லை. தமிழரின் தேவையென்ன? நிரந்தரமான பாதுகாப்பு… அதனைக் கேட்டு வலியுறுத்தலாமேயன்றி முரட்டுத்தனமாக நடப்பது, போராட்டத்தின் இலக்கை எட்டும் போது மட்பாண்டம் உடைபடுவது போன்ற வகையில் சுக்குநூறாக்கி விடக்கூடாது.

எமக்கும் வெளிநாட்டவருக்கும் என்ன பிரச்சினை? எமது கருத்தைச் சொல்வதற்கு எமது எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு இடம் தந்துள்ளனர்.

எனவே நன்றியுடன் நாம் சட்டத்தை மதிக்காமல் விடுவோமென்றால் பாதிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கேயன்றி தனிப்பட்டவர்களுக்கு இல்லை என்பதை மனம் கொண்டு நடப்பது ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

தமிழர்கள் வன்முறையாளர்களா?

உலகில் சில நாடுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பார்க்கின்றன. தமிழர்கள் வன்முறையாளர்கள் என்று கூறி வருகின்றன. ஆனால் உண்மை என்ன? தமிழர் இன அழிப்பிற்கு உள்ளாகின்ற போது தம்மைத் தாமே பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் வன்முறையை வன்முறையால் எதிர்கொண்டனர். வேறு வழியின்றித் தான் ஆயுதமேந்தினர்.

வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள வேண்டிய இடம் சிறிலங்காவின் எல்லை. ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அதனைச் செய்யத் தேவையில்லை. சிங்களப் பேரினவாத அரசின் கோர முகத்தை வெளிக்காட்டுவதற்கு சிறையில் சித்திரவதை செய்யப்படுவது. காயக்கட்டு கொடுமைகளைச் சித்தரிக்கும் ஊர்தி, சுலோகங்கள் நியாயக் குரல் எழுப்பல் என்று எத்தனையோ ஆயிரம் வழிகள் உள்ளன.

தமிழர்கள் ஏற்கனவே வன்றையாளர்கள் என்று அடையாளத்தை ஏற்படுத்துவதற்கு உலகம் முழுவதும் சிங்களப் பேரினவாத அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. போதாக்குறைக்கு நாமும் வில்லங்கத்திற்கு வினையை ஏன் பெறுவான்? பிற நாடுகளில் உலகில் எங்கு என்றாலும் நாம் சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் செயற்பட வேண்டும்.

கொடுமைகளின் வெளிப்பாடாக சிங்களப் பேரினவாதத்தின் கோர முகத்தை சித்தரிக்கும் வகையில் உருவங்களைக் கொண்டு வருவது நல்ல விடயம். எமது மக்களுக்கு சொல்லிலும் எழுத்திலும் வெளிப்படுத்தி விட முடியாத கொடுமைகள் நாளாந்தம் ஏற்படுத்தப்படுகின்ற போது அதனை வெளிப்படுத்தலாம். நாம் கொண்டு வரும் அனைத்தையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக தீ மூட்டிக் கொழுத்துவது வேறுவிதமான பார்வைக்கு உட்படுத்தி விடும். நாம் சொல்ல வந்ததுக்கு மாறாக வேறு செய்தியை வெளிப்படுத்தி விடுவதுடன் குறிப்பிட்ட இடத்தை மாசுபடுத்தியதற்காக தண்டம் வழங்க வேண்டிய நிலையும் ஏற்படும்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் ஒரு கால் முறிந்த நாற்காலி இருக்கின்றது. அது ஏன் வைக்கப்பட்டுள்ளது? உலகில் கண்ணிவெடியில் பாதிக்கப்படுவது பற்றிய கொடுமையை சித்தரிப்பதற்காக. குறிப்பிட்ட நாற்காலியை உலகம் பார்க்கும் பார்வை வேறு இது உயரமாக இருக்கின்றது என்று நாம் அதில் ஏறி வீரம் காட்ட முடியாது. புலிக்கொடி தமிழரின் உயிர்களால் உருவான புனிதக் கொடி. அதனை அடுத்தவர் வன்முறையின் சின்னமாக நோக்குவதை நாம் அனுமதிக்க முடியாது.

வவுனியா நகர சபை திறந்த வெளியரங்கில் அமைதி வழிப் பேச்சு நடந்த 2004 ஆம் ஆண்டு புலிக்கொடியேற்றி நிகழ்வொன்று ஆரம்பமாவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த வேளை, சிறிலங்காப் படையினர் கொடி ஏற்றக் கூடாது என்று கூறினர். அப்போது அங்கு நின்ற அம்மா ஒருவர் ‘தாலிக்கொடியை அறுத்தீர்கள். தொப்புள்கொடியை அறுத்தீர்கள் அவை இந்தப் புலிக்கொடிக்கான விலைகொடுப்பு. எனவே, புலிக்கொடியை அறுப்பதற்கு விட மாட்டோம்” என்று கூறினார்.

இதுவேதான் ஒரு சிலரைத் தவிர்த்த பெருவாரியான மக்களின் விருப்பமும் ஆகும்.

எமக்குக் பெருமையான எமது சொத்தை நாம் மலினப்படுத்தி விடக்கூடாது. நாம் வன்முறையாளர் இல்லை. நாம் மனிதர்கள் எமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதனால் எம்மை நாமே ஆட்சி புரிந்து வாழ விடுங்கள் என்று அமைதி வழியில் போராடப் புறப்பட்டு விட்டு எமக்கே குழி பறிக்கும் வேலையைச் செய்யக் கூடாது.

ஐக்கிய நாடுகள் சபைக்குப் பாதுகாப்பு வழங்கக் கடமையில் நிற்கும் பொலிசாரிற்கும் எமக்கும் என்ன பிரச்சினை. பிரதான வாயில் தாண்டி உள்நுழைந்து என்ன சாதிக்க முடியும்? இருந்ததையும் கெடுத்தான் என்று தான் நிலைமை மாறும்.

வெளிநாடுகளில் இப்படியான போராட்டங்களை நிதானமாகச் செய்வது தான் பலம். கடும் முறுக்குத் தெறிக்கும் என்பதை நாம் அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.

மக்களின் துயர் கண்டு நாம் கொதிப்படைவது நியாயம் தான் அதற்காக…..

தாயகத்தில் எமது உறவுகள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்படுகின்ற போது கொதிநிலை ஏற்படும் தான். எங்களுடைய சொந்தங்கள் செத்து மடிகையில் சீரழிக்கப்படுகையில் நாம் கொதிப்படைவது நியாயமானதே. அதற்காக அடுத்தவரைக் கொதிப்படையச் செய்யும் வேலைகளைச் செய்வது எந்த வகையில் நியாயமாகும்?.

களத்தில் போர் புலத்தில் போராட்டம் என்று தானே சொல்கின்றனர். போராட்டம் என்றால் கரைசேரும் வரை செய்யப்பட வேண்டியது.

விடுதலைப் போராட்டங்களில் உலகமட்ட அமைதி வழிப் போராட்டங்களை நாம் கூர்ந்து கவனிக்கவில்லையென்றால் இன்று உலகம் பேசக்கூடியளவிற்கு தமிழரின் விடுதலைப் போராட்டம் வளர்ந்திராது. (தமிழீழ விடுதலைக்காக உயிர்களை ஈகம் செய்தவர்களின் தியாகம் அது உன்னதமானது. போற்றுதற்குரியது. அதற்கு ஈடாக வேறெதுவும் தெரியவில்லை நினைத்தாலே மெய்சிலிர்க்கின்றது.

அமைதி வழிப் போராட்டத்தால் மட்டும் உலகம் எம்மைத் திரும்பிப் பார்க்கவில்லை. இங்கு நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் தமிழருக்கு என்று தனிப்பட்ட ரீதியான பழக்க வழக்கங்களினால் இருக்கக்கூடிய அடையாளத்தை எப்படிப் பேணி வளர்த்தோம். அது எம்மீதான பார்வையை வேற்றினத்தவரிடம் நல்லவிதமான ஏற்படுத்தியுள்ளதா, இல்லையா? தனிப்பட்ட ரீதியான பழக்க வழக்கங்களினால் இருக்கக்கூடிய அடையாளத்தை எப்படிப் பேணி வளர்த்தோம். அது எம்மீதான பார்வையை வேற்றினத்தவரிடம் நல்லவிதமாக ஏற்படுத்தியுள்ளதா, இல்லையா?

தனிப்பட்ட ரீதியில் நாம் நல்லவர். ஒன்றாகக் கூடிவிட்டோம் என்றால் தொடங்கி விடுவோம் எங்களது விளையாட்டை என்று மனம் போன போக்கில் போகாமல் விடுதலைப் போராட்டத்திற்கான அடையாளத்தையும் நாம் எமது பொறுமையான உறுதியான விடுதலைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இது பாடம் படிப்பிக்கும் காலமல்ல. எனினும் குந்தியிருப்பது வேடிக்கை பார்க்கவும் முடியவில்லை.

போராட்டங்களை ஒழுங்கமைப்பவர்களின் கவனத்திற்கு

இப்படியான நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது என்பது சாதாரணமானது கிடையாது. ஆனால் சில தொய்வுகள் தவறுகள் நடந்து விடுகின்றன. குறித்த நேரத்திற்குப் பேரணியை இருவரிசைப்படுத்தி நகர்த்தி விடுவது ஒன்று. கூடும் இடம்செல்லும் வரையிலும் பேரணி பிரமாண்டமாகத் தெரிவதுடன் வழிநெடுகிலும் மன உளைச்சல் படத் தேவையில்லை.

மேடையில் நடக்கும் நிகழ்வுகளையும் ஏற்கனவே போடப்பட்ட திட்டங்களின் படி குழப்பங்கள் இல்லாமல் நடத்துவது தான். திரண்ட மக்கள் மத்தியில் கனதியை வெளிப்படுத்தும். பிழை பிடிப்பவர்கள் பிழை பிடிப்பார்கள் செய்து பார்த்தால் தான் தெரியும் என்பதை நான் மறுக்க மாட்டேன். செய்வதைச் சரியாகச் செய்வதற்கு எனது தாழ்மையான வேண்டுகோள்.

இந்த மக்கள் எழுச்சி போதும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

சிங்களப் பேரினவாதிகள் தமிழ்த் தாயின் வயிற்றுக்குள்ளிருக்கும் சிசுவையும் தமிழ் என்ற காரணத்திற்காக விடுவதாகத் தெரியவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு மிகக் கொடூரமான தாக்குதல்களைச் செய்கின்றனர்.

இந்த நிலமையில் உலக நாடுகளில் வாழும் தமிழரின் போராட்டம் திருப்திப்பட்டு விடக் கூடியதாகத் தெரியவில்லை. இன்னுமின்னும் எழுச்சியடைய வேண்டியதாகத் தான் தெரிகின்றது. (அதற்காக இதுவரை செய்த போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாக நினைத்து விடாதீர்கள்.) நேரங்களை ஒதுக்கி பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு குடும்பங்களாக உலக நாடுகளில் இருக்கும் தமிழர் போராடித் தான் வருகின்றனர். நேரம் ஒதுக்கி போராட்டம் தொடர்ச்சியாகத் தான் செய்யப்படுகின்றது. ஆனாலும் இது போதும் என்று நாம் அடங்கிவிட முடியாது.

சிங்களப் பேரினவாதத்தின் வெறியாட்டம் இன்னும் தொடர்கின்றது. அவர்களின் தமிழின அழிப்பு ஓய்வின்றித் தொடர்கின்றது. முடிவில்லாமல் தொடரும் பேரினவாதிகளின் தமிழினப் படுகொலை நிறுத்தப்படும் வரை தமிழரின் பாதுகாப்பிற்கு நிரந்தரமான பாதுகாப்பு ஏற்படும் வரை உலகத் தமிழினம் தொடராகப் போராட வேண்டும்.

தமிழினம் அழிக்கப்படுவதை மூடி மறைக்கும் வகையில் திட்டமிட்ட முறையில் பரப்புரையைச் செய்து வரும் சிங்களப் பேரினவாதிகளின் நயவஞ்சகத் தந்திரங்களைப் புரிந்து கொள்வதும் தமிழரின் கடமையாக இருக்க வேண்டும்.

வேதனையும் அச்சமும் மட்டும் எமக்கான தீர்வைத் தரப் போவதில்லை. உண்மைகளை உலகம் தெரிந்திருந்தும் கண்மூடிக் கிடக்கின்றது. தங்களைத் தமிழர் என்று கூறிக்கொள்ளும் சிலர் நூறு வீதம் எதிரிக்குச் சார்பான உண்மைக்குப் புறம்பாக தொடர்ந்தும் செயற்படுகின்றனர். இதிலிருந்து நாம் தெளிவடைந்து செயற்படவில்லை என்றால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அழிவைத் தடுக்க முடியாது.

எனவே நிலமையைப் புரிந்து கொண்டு உலக நாடுகளை எமது நியாயமான உரிமைப்போரை ஏற்கும் வகையில் அவர்களை நீதியின் பக்கம் கொண்டு வரப்பட வேண்டும்.

களத்தின் நிலமையைப் புரிந்து கொண்டு புலத்தில் மக்கள் எழுச்சி கொண்டால்தான் தாய்நிலத்தில் உள்ளோர் நலமாக வாழ முடியும். இதற்காக உலகத் தமிழினம் பேரெழுச்சி கொண்டால் பெருவெற்றி உள்ளது.

உலகமே தமிழின விடுதலையை ஏற்காயோ என்று ஏற்கும் வரைத் தமிழர் குரல் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். இதுவரையும் போராட்டங்கள் நடந்துள்ளன தான். ஆனால் அவை போதும் என்று நினைத்து விடுமளவிற்கு மாற்றம் நிகழ்ந்து விடவில்லை.

இந்த விடயங்களை அறிவுடைய எமது சமூகம் நிச்சயமாகப் புரிந்து கொள்ளும் என நம்பிக்i உண்டு. இலக்கை எட்டும் வரைப் பயணம் தொடரப்பட வேண்டும்.

நன்றி: நிலவரம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.