குடும்பச் சண்டை-அமெரிக்காவில் 6 தமிழர்கள் சுட்டுக் கொலை

சான்டா கிளாரா (கலிபோர்னியா): நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

நீலகிரி மாவட்டம் அய்யன்கோலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவரது குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வருகின்றனர்.

தேவராஜன் குடும்பத்தினருக்கும், அவரது உறவினரான அசோகன் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. அசோகனும் குடும்பத்துடன் சான்டா கிளாராவில்தான் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தேவராஜனின் வீட்டில் வைத்து மோதல் வெடித்துள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த தேவராஜன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்.

இதில் சுசித்ரா, அகில், அசோகன், நேஹா, அஹானா ஆகியோர் உயிரிழந்தனர். தேவராஜனின் மனைவி அபா படுகாயமடைந்தார். அனைவரையும் சுட்டுத் தள்ளிய பின்னர் தேவராஜன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ரத்தம் கொட்டிய நிலையி்ல் அபா வீட்டுக்கு வெளியே வந்து உதவி கோர முயன்றார். ஆனால் முடியாமல் அப்படியே விழுந்து விட்டார்.

படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் அபாவை உடனடியாக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்குள் பிணமாகக் கிடந்த ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்ஸ் தமிழ்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.