சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கு எதிராக வழக்கு -கொலம்பியா நீதிமன்றத்தில் தாக்கல்

colombiaதமிழர்கள் படுகொலைகளுக்கு எதிரான அமெரிக்க குழு, அமெரிக்க திறைசேரி செயலாளர் திமுதி கெய்த்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அமெரிக்க நிறைவேற்று அதிகாரி மெக் லன்டாசாகர் ஆகியோருக்கு எதிராக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் 1.9 பில்லியன் டொலர்கள் வழங்கப்படுவதை ஆட்சேபித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தாக்கலின் பிரதிகள் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், திறைசேரி போன்றவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழர்கள் படுகொலைக்கு எதிரான அமைப்பின் ஆலோசகர் புரூஸ் பெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 84 பக்கங்களைக் கொண்ட இந்த மனுவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுநர் உட்பட்டவர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இலங்கையில் மனித உரிமைகள் பாரியளவில் மீறப்பட்டு வருகின்றன. தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்கள் வழங்கப்படுவது அமெரிக்க அரசியலமைப்பை மீறும் செயல் என இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் காணாமல் போதல் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் மீது குண்டுத்தாக்குதல்களை நடத்துவது ஜெனீவா ஹேக் உடன்படிக்கைக்கு எதிரான செயலாகும். அத்துடன் பாலியல் வன்புணர்வுகள், மனித நேயமற்ற செயல்கள், நீதியற்ற முறையில் ஆட்கள் தடுத்து வைக்கப்படுதல், கைதுகள், மருத்துவ வசதிகள் வழங்கப்படாமை, பட்டினி, பேச்சு சுதந்திரமின்மை, அரசியல் பிரதிநிதித்துவ மறுப்பு, சித்திரவதைகள் என்பன இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.