புலிகளுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது : ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு

mahinda“விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்தத்திற்கு செல்லாது. யுத்தத்தை நிறுத்துமாறு உள்ளூரிலோ, சர்வதேச ரீதியிலோ எமக்கு எத்தகைய அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி படையினர் செயற்படுவதனாலேயே யுத்தத்தின் வெற்றி காலதாமதம் அடைந்து வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை நேற்றுக்காலை சந்தித்துப் பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:

“கடந்த கால தலைவர்கள் யுத்தத்தினால் அபிவிருத்திகள் தடைப்படுவதாக குற்றம் சுமத்தினர். ஆனால், எமது அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், அபிவிருத்தியையும் மேற்கொள்கின்றது.

அரசாங்கம் நுரைச்சோலை அனல் மின்திட்டம், மேல் கொத்மலை மின் திட்டம் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்கிறது. கூடுதலான விருப்பு வாக்குப் பெறுபவர் மட்டும் மேல் மாகாண சபையின் முதலமைச்சராக நியமிக்கப்படமாட்டார். கட்சியின் சிரேஷ்டத்துவமும் இதன்போது கருத்தில் கொள்ளப்படும். இதனால், விருப்பு வாக்குகளுக்காக கட்சி உறுப்பினர்கள் மோதிக் கொள்ளக் கூடாது. புலிகளுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது.” இவ்வாறு அவர் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.