இலங்கை தொடர்பில் ஒரு ‘மாபெரும் தேசம்’ மயான அமைதி காக்கிறது : அருந்ததி ராய்

arundhati-royபடுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது – இனவதை முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகின்ற போது – இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது – ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது – படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, இனவதைமுகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகிற போது, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது, ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது ஒரு ‘மாபெரும் தேசம்’ மயான அமைதி காக்கிறது.

இலங்கையைச் சூழ உள்ளவர்களது மௌனம், அங்கு பயங்கரம் படிப்படியாக அதிகரித்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் பிரதான ஊடகங்களில் அது பற்றிய எவ்வித அறிக்கைகளும் வெளியாவதில்லை. உண்மையில் சர்வதேச ஊடகங்களிலும் நிலைமை அவ்வாறு தான் உள்ளது. அங்கு என்ன தான் நடைபெறுகிறது? அவை பற்றி நாம் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?

அங்கிருந்து வடிகட்டப்பட்டு வெளிவரும் செய்திகளினூடாக இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் நாட்டின் ஜனநாயகத்தையே சிதைத்து அழித்து வருவதை அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மேல் சொல்லுந்தரமற்ற குற்றங்களைப் புரிந்து வருகிறது.

அவனோ, அவளோ தாம் பயங்கரவாதி அல்ல என்று நிரூபிக்காதவரை ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதி என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் போரை நடத்தி வருகிறது. மக்கள் வாழிடங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பாதுகாப்புக்காகத் தங்கியிருக்கும் இடங்கள் என்பனவற்றின் மீது குண்டுகளை வீசப்பட்டு வருகிறது. இலங்கை இராணுவத்தனர் டாங்கிகளுடனும் விமானப் படையினரின் உதவியுடனும் முன்னேறி வருகின்றனர். இரண்டு லட்சம் மக்கள் இந்தப் போர்ப் பிராந்தியத்துள் அகப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் வீடிழந்த மக்களுக்காக நலன்புரிக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்.14ஆம் திகதிய ‘டெய்லி ரெலிகிராபி’ன் அறிக்கை படி போர்ப் பிராந்தியத்திலிருந்து தப்பி வரும் எல்லா மக்களையும் கட்டாயப்படுத்தித் தங்க வைப்பதற்கான இடங்களாக இவை இருக்கின்றன. இவை மறைமுகமான இனவதை முகாம்களா?

அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் என்று கூறி சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள எல்லாத் தமிழர்களையும் பதிவு செய்யும் வேலையை ஆரம்பித்தது. இது 1930களின் நாசிகள் செய்ததைப் போன்று வேறு நோக்கங்களுக்கானது என்பதை வெளிப்படுத்துகிறது என முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ‘டெய்லி ரெலிகிராப்’புக்குத் தெரிவித்திருந்தார். இதனூடாக எல்லாத் தமிழர்களும் இயல்பாகவே பயங்கரவாதிகள் என்று அவர்கள் முத்திரை குத்தப்படப் போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளைத் துடைத்தழிப்பது தான் இதன் நோக்கம் என்று கூறப்பட்டாலும் கூட, மக்கள் மீது அல்லது பயங்கரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும், பிறருக்கு அனர்த்தம் விளைவிக்கும் தீய எண்ணம் கொண்ட இந்த அழிப்பு நடவடிக்கை, இலங்கை அரசாங்கம் இறுதியில் இனப்படுகொலையை நோக்கியே நகர்கிறது என்பதையே கோடி காட்டுகிறது.

ஐ.நாவின் கணிப்பின்படி ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மிக மோசமாகப் படுகாயமடைந்துள்ளார்கள். அந்த நரகத்தின் பயங்கரம் பற்றி விபரிக்கும் ஒரு சில கண்கண்ட சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. நாங்கள் எவற்றுக்குச் சாட்சியாக இருக்கிறோம்? இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. நாங்கள் அதனை ஒரு இனரீதியான போர் என்று சொல்லலாமா?

எந்தவிதமான தண்டனைகளுக்கும் அகப்படாமல் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்தக் குற்றச் செயல்கள் உண்மையிலேயே மிகப் பாரதூரமான இனப்பாகுபாட்டு நடவடிக்கைகளே. இவை இலங்கையில் உள்ள தமிழர்களை அவர்களுடைய இடத்திலிருந்து முற்றாகவே ஓரம்கட்டி விடுகிற அந்நியப்படுத்தி விடுகிற நடவடிக்கைகளாகும்.

சமூக ஒடுக்குமுறை, சித்திரவதை, பொருளாதாரத்தடை என இனவாதத்திற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. இந்தத் தசாப்தத்தின் நீண்ட உள்நாட்டுப் போர், அமைதியாக வன்முறையற்ற எதிர்ப்புடன் தான் ஆரம்பமாகியது.

“ஏன் இந்த மௌனம்?” என்ற மங்கள சமரவீரவின் இன்னொரு நேர்காணலில், “சுதந்திர ஊடகம் என்பதை இன்று இலங்கையில் காண முடியாது” என்கிறார்.

சமூகத்தை அச்சத்துள் உறையச் செய்திருக்கும் வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் கொலைக் குழுக்களைப் பற்றியும் அந்த நேர்காணலில் மங்கள சமரவீர பேசுகிறார். மாற்று அபிப்பிராயங்கள் கொண்ட பல்வேறு ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அல்லது காணாமல் போயிருக்கிறார்கள் ஏன் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். ஊடகவியலாளர்களை மௌனமாக்க இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான சட்டத்தைப் பாவிப்பதாக சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (IFJ) குற்றம் சாட்டியிருக்கிறது.

மனிதத்திற்கெதிரான இலங்கை அரசின் இந்தக் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவிகளையும் உபகரணங்களையும் வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்குமானால் இதுவொரு பாரிய குற்றமாகும். ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான், சீனா எவ்வாறு உதவி செய்கின்றன? அல்லது இந்தச் சூழலை எவ்வாறு பாழடிக்கின்றன?

இலங்கையின் இந்த நிலைமைகள் தமிழ்நாட்டில் தீவிர எழுச்சிக்குத் தூபமிட்டுள்ளன. இதனால் பத்துக்கு மேற்பட்டோர் தமக்குத் தாமே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்கள். பொதுமக்கள் கடும் கோபமும் கடுந்துயரும் கொண்டுள்ளனர். அவற்றுள் பெரும்பாலானவை அப்பழுக்கற்றவை. எனினும்; சில, எதிர்வரும் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட எந்தப் பிரயோசனமுமற்ற அரசியல் மோசடிகள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இலங்கையில் என்ன நடக்கிறது? இந்த மௌனம் மன்னிக்கப்படக் கூடியதா? முதலில் ஒரு பக்கம் சாய்வதும் பின்னர் மறுபக்கம் சாய்வதுமான இந்திய அரசாங்கத்தின் இந்தப் பொறுப்பற்ற போக்குத் தொடர்கிறது.

எங்களில் பலர் நான் உட்பட, முன்னரே இதைப்பற்றிப் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனெனில் போரைப் பற்றிய தகவல்கள் போதாமலிருந்தமைதான். படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, இனவதைமுகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகிற போது, இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது, ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது ஒரு ‘மாபெரும் தேசம்’ மயான அமைதி காக்கிறது.

இது மிகப்பிரமாண்டமான மனிதாயத் துயரம். உலகம் முன்னோக்கிப் பார்க்க வேண்டும். ஏற்கனவே காலம் தாழ்த்தப்பட்டு விட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.