ஒரு மணி நேரம் கூட போர் நிறுத்தப்பட மாட்டாது; சரணடைவதை தவிர புலிகளுக்கு வேறு வழியில்லை : அரசு அறிவிப்பு

sril-200_16“விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எந்த விதத்திலும் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை. ஒரு மணி நேரத்துக்கேனும் தற்காலிகமானதொரு போர் நிறுத்தத்தைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளாது” என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இதனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடனோ அல்லது ஆயுதங்களைக் கீழே வைத்தோ சரணடைவதை தவிர வேறு வழி இல்லை. இந்நிலையில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் வெளியேற இடமளித்து புலிகள் படையினரை நேருக்கு நேர் முகங்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது :

“யுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நடவடிக்கை தற்போது 95வீதம் நிறைவடைந்துள்ளது. படிப்படியான வெற்றிகளுக்கு மத்தியில் போரின் இறுதித் தருணத்தை படையினர் எட்டியுள்ளனர். போரின் மூலம் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று கருத்துக்களை வெளியிட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்களும் இதனை இன்று ஏற்றுக்கொண்டுள்ளன.

புலிகள் இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் ஒத்துழைப்புக்களை வழங்கிவரும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். அதன் போது யுத்தத்துக்கு பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. போர் நடவடிக்கைகளுக்குப் பின்னர் நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்காக பல நாடுகளும் சமூகங்களும் பல்வேறுபட்ட உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. இது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியைச் சீர் செய்வதோடு அபிவிருத்திக்கும் வழிவகுக்கும்.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பொருளாதார ரீதியான உதவிகளை சீர்க்குலைக்க விடுதலைப் புலிகள் இயக்கமும் அவ்வியக்கத்துக்குச் சார்பான குழுவினரும் சதி செய்து வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது இத்தகைய சதிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். புலிகளுடன் அரசாங்கம் தற்காலிகப் போர் நிறுத்தத்தினை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றது என்று பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். இதன்மூலம் அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது. உண்மையில் போர் நிறுத்தத்துக்கும் தற்காலிகப் போர் நிறுத்தத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. தற்காலிகப் போர் நிறுத்தமானது போர் இடம்பெறும் நாடுகளில் பொதுமக்களின் நலன் கருதி அடிக்கடி மேற்கொள்ளப்படும். இதனை எமது அரசாங்கமும் கையாண்டது.

வன்னியில் சிக்குண்டுள்ள அப்பாவிப் பொதுமக்களை வெளியேற்றுமாறு கோரி அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முப்படைத் தளபதிகளின் ஆலோசனையின் பேரில் 48 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இனி ஒருபோதும், ஒரு மணிநேரமேனும் யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடிக்க அரசாங்கம் தயாரில்லை. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனும் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.

வன்னியில் சிக்குண்டு அல்லல்படும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் மனப்பூர்வமாக நினைத்தால் ஆயுதங்களைக் கீழே வைத்தேனும் அல்லது ஆயுதங்களுடனேனும் சரணடைய வேண்டும். அவ்வாறு அவர்கள் ஆயுதங்களுடன் சரணடைவார்களாயின் அவர்களது ஆயுதங்களைக் களைவதற்கு அதன் பின்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

அவ்வாறில்லையெனின் பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதியளிக்க வேண்டும். அவ்வாறு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது உணரப்பட்டால் பாரிய தாக்குதல்களை நடத்துவதை படையினர் தவிர்த்துக் கொள்வர். இவ்வாறு கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் படையினர் தாக்குதல்களைத் தவிர்த்துள்ளனர் என்பதை அனைத்துத் தரப்பினரும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் குழுக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்களை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.