யுத்த நிறுத்தத்தை அறிவிக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துவோம் :தமிழக முதல்வருக்கு சோனியா கடிதம்

sonia_gandhiஇலங்கையில் வாடும் அப்பாவித் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன் கடந்த 30 வருட காலமாக இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருவதாகவும் அங்கு யுத்த நிறுத்தத்தை அறிவிக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துவோம் என்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

“தங்களின் மார்ச் 28ஆம் திகதி கடிதத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போர், அதன் காரணமாக அங்குள்ள தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரங்கள், நம்மை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியுள்ளன.

அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை பேணவும் தேவையான முயற்சிகள் அனைத்தையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உள்ளபடியே அதற்கான முதல்கட்டமாக யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும். நமது பிரதமர் கடிதத்தில் ஏற்கனவே தெரிவித்துள்ள படி நமது அரசு, இலங்கை அரசுடன் பல்வேறு வகையான கருத்துருக்களின் மீது தொடர்பு கொண்டு வருகிறது.

குறிப்பாக யுத்த நிறுத்தத்தைப் பற்றியும் தொடர்பு கொண்டு வருகிறது. யுத்த நிறுத்தம் ஏற்பட்டால்தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர முடியும்.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.