அலம்பில் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை – கடற்புலிகள் கடும் சமர்

ltteboatsசிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் நேற்று இரவு கடும் சமர் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இன்று சனிக்கிழமை காலை செய்தி வெளியிட்டுள்ள போதிலும் விடுதலைப் புலிகளிடம் இருந்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

வடகிழக்குக் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படைப்பரிவு நேற்று இரவு 11:30 நிமிடமளவில் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சில படகுகளை இடைமறித்த போதே கடலில் சமர் தொடங்கியதாக பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் பத்து படகுகளில் வந்ததாகவும், அதில் மூன்று தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்குரிய படகுகள் எனவும் ஏனைய ஏழும் தாக்குதல் படகுகள் எனவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் படகுகள் புதுமத்தாளன் பகுதியில் இருந்தே வந்ததாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் படகுகள் தென்பகுதியை நோக்கிய நகர்வை மேற்கொண்டிருந்த போது அவற்றின் மீது தாக்குதலை நடத்திய கடற்படையினர் அவற்றில் ஒன்றை முற்றாகவே அழித்ததாகவும், மற்றொன்றை செயலிழக்கச் செய்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட விடுதலைப் புலிகளின் ஏனைய இரண்டு படகுகள் கடற்கரைப் பகுதியை நோக்கிச் சென்றபோது தரைப்படையின் தாக்குலால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் ஏனைய படகுகள் அந்தப் பகுதியில் இருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சமரின் போது கடற்படைப் படகுளில் ஒன்று சிறிய சேதத்துக்குள்ளாகியதாகவும், கடற்படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள போதிலும் இச்சமர் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.