ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இலங்கை நிலைமை உத்தியோகபூர்வமாக ஆராயப்படும் – மெக்ஸிக்கோ தூதர்

helle200ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் இலங்கை நிலைமை குறித்து உத்தியோகபூர்வமாக ஆராயப்படும் என அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மெக்ஸிகோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் சபையின் இம்மாதத்திற்கான தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மெக்ஸிக்கோ தூதர் கிலௌடே ஹெலர் ‘இன்னர் சிற்றி பிறெஸ்’ செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் நடைபெறும் பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகின்றது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஏப்ரல் மாதத்திற்கான நிகழ்ச்சி நிரலில் எதற்காக இலங்கை விவகாரம் உத்தியோக பூர்வமாக இடம்பெறவில்லையென்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள பாதுகாப்புச் சபையின் புதிய தலைவர், “இலங்கை தொடர்பாக பாதுகாப்புச் சபையில் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெற்றிருக்கவில்லை என சில நாடுகள் கூறுகின்றன. நாங்கள் இலங்கை விடயம் குறித்து ஆராய்வது முக்கியமானது எனக் கருதுகிறோம்” என்று தெரிவித்தார்.

பாதுகாப்புச் சபை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் மூடிய கதவுகளுக்குள் இரு தடவைகள் இலங்கை குறித்து ஆராய்ந்ததை மிகவும் பெறுமதி வாய்ந்த விடயம் என அவர் வர்ணித்துள்ளார். அதேபோன்று மீண்டும் இடம்பெறாது தாம் தவிர்க்க உள்ளதாக ஹெலர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மேற்கொண்ட முன்முயற்சியையும், ஐ.நா.வின் முக்கிய அதிகாரிகளின் விஜயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் தொலைபேசி அழைப்புக்குப் பின்னர், “நாங்கள் எந்தவிதமான சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கும் அடிபணிய மாட்டோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து கருத்துகளை வெளியிட மெக்ஸிக்கோ தூதர் மறுத்து விட்டார். பாதுகாப்புச்சபையின் தலைவர் என்ற வகையில் எவ்வாறு செயற்படப் போகிறீர்கள் என்று ‘இன்னர் சிற்றி பிறெஸ்’ சார்பில் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த மெக்ஸிகோவின் தூதர், ஏனைய விடயங்களுடன் பாதுகாப்புச் சபையின் கூட்டமொன்று அவசியமென்றும் இலங்கை, மியன்மார் பிரச்சினைகள் அதில் ஆராயப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை விடயங்கள் பாதுகாப்புச் சபையில் இடம்பெறக் கூடாது. ஐக்கிய நாடுகளின் வேறு அமைப்புகளில் இவை இடம்பெற வேண்டுமென சில நாடுகள் விரும்புகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையில் இடம்பெறுவதைக் கடுமையாக எதிர்த்த நாடு லிபியா. அதனிடமிருந்து இலங்கை நிலைமை குறித்து ஆராயப்பட வேண்டுமென முதலில் வேண்டுகோள் விடுத்தது மெக்ஸிக்கோ தான். அந்நாட்டிடமே பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பு சென்றுள்ளதால் சபையில் இலங்கை விவகாரம் மீண்டும் ஆராயப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் ‘இன்னர் சிற்றி பிறெஸ்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.