ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையக் காலக்கெடு எச்சரிக்கை

புதுக்குடியிருப்பு கிழக்கில் இரண்டு சதுர கிலோ மீற்றர் சதுர நிலப்பரப்புக்குள் அடைபட்டுள்ள புலிகள் இன்று சனிக்கிழமைக்குள் ஆயுதங்களைக் கைவிட்டு உடனடியாகச் சரணடைய வேண்டும். அதற்கான இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரவீந்திர சில்வா விடுத்துள்ளதாக அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு சரணடையாவிடின் அவர்களை அழித்தொழிக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெறும் எனவும் ஆயுதங்களைக் கீழே வைத்துச் சரணடைபவர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கட்டளைத் தளபதி தெரிவித்திருக்கிறார்.

அப்பகுதிக்குள் இருநூறுக்கும் மேற்பட்ட புலிகள் சிக்குண்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாள்களுக்குள் இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு பிரதேசங்கள் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்றும் கட்டளைத் தளபதி கூறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தினுள் புலிகளின் விநியோக மார்க்கங்கள் தடுக்கப்பட்டு விட்டதாகவும், சரணடையாவிடின் அவர்களின் அழிவைத் தடுக்க முடியாது என யுத்த களத்தில் உள்ள மற்றொரு சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒரு வரும் கூறியதாகவும் அரச ஊடகம் நேற்று தகவல் வெளியிட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.