இலங்கை அரசாங்கம், யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ukதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை வழங்கியுள்ள போர் நிறுத்ததிற்கான வாய்ப்பை, இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் நிலவுகின்ற இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து தீர்ப்பதற்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பு என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால், பாதுகாப்பு வலயங்களில் பொது மக்கள் கொல்லப்படுவதும், கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதும் கண்டனத்திற்குறியது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில், இலங்கை அரசாங்கம் யாருடனும் ஒத்துப்போக மறுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள அவர்கள், யுத்தம் ஒருபோதும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வினைக் கொண்டு வராது என அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் நிலையிலும், இலங்கை ஜனாதிபதி அதனை ஏற்க மறுத்து வருவதாக ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதானி மைக் பொஸ்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்த நிறுத்தம் ஓன்றினை மேற்கொள்ளாது, பாதிக்கப்படுகின்ற மக்களை வெளியேற்ற முடியாது. அத்துடன் வன்னியில் அன்றாடம் நூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள், அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கொல்லப்படுகின்றனர். ஏராளமானவர்கள் காயமடைகின்றனர்.

இலங்கையில் நடைபெறுகின்ற மனிதாபிமான நெருக்கடி தொடர்பிலான தகவல்கள் தமக்கு வந்தவண்ணம் உள்ளன என்றும் மைக் பொஸ்டர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.