தமிழீழ மக்களைக் பதவிக்காக பலிகொடுத்த கருணாநிதியை ஆதரிக்காதீர்

stopsignதமிழீழ மக்களைக் பதவிக்காக பலிகொடுத்த கருணாநிதியை ஆதரிக்காதீர்-வீரமணிக்கு கனடா நக்கீரன் அறிவுரை : தமிழக அரசியலில் யாருமே யோக்கியவான்கள் இல்லை. நீங்கள் கூட ஜெயலலிதாவின் சேலைத் தலைப்பில் தொங்கிக் கொண்டு கலைஞர் கருணாநிதியைச் சாடியவர்தான் ‘சமூக நீதி காத்த வீராங்கனை” என்று பட்டம் கொடுத்து துதிபாடியதை மறந்து விட்டீர்களா? ‘மருந்து, உணவுப் பொருட்களை கப்பல் மூலமாக அனுப்பி மத்திய அரசு மூலமாக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே இதை இல்லை என்று மறுக்க முடியுமா?”  என்று கேட்கிறீர்கள். நல்ல கேள்வி.

தமிழ்மக்களைக் குண்டு போட்டு கொல்ல பச்சைக் கொடி காட்டிவிட்டு, போரை நடத்தும் சிறிலங்காவிற்கு ஆயுதம், பயிற்சி நிதி போன்றவற்கைக் கொடுக்கும் மத்திய காங்கிரஸ்சில் பங்காளியாக இருந்து கொண்டு  உணவு,  மருந்து அனுப்பவதில் பொருள் உண்டா? சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களை சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் (பாவம் மன்மோகன் சிங் அவர் வெறும் பொம்மைதான்) குப்பைத் தொட்டியில் போட்டது கருணாநிதிக்கு …….. அடித்தது போன்றது. கருணாநிதிக்கு வெட்கம் மானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்குப் பெரிய அவமானமாக இருக்கிறது.

‘அது மட்டுமல்ல 50 கோடி ரூபாய் நிதி திரட்டியும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் கலைஞர் கொடுத்தாரே. ஆனால் இவற்றை எல்லாம் மறைத்து இலங்கை பிரச்சினையில் நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம். அரசியல் கண்ணோட்டம் வேண்டாம். நாம் எல்லோரும் ஓரணியில் இருப்பதை ஒற்றுமையாக இருப்பதைக் காட்ட வேண்டும் என்று பெருந்தன்மையுடன் சொன்னவர் கலைஞர் அல்லவா?” எனக் கேட்கிறீர்கள். ஆனால் இதே கலைஞர்தான் முன்னர் பழ.நெடுமாறன் சேர்த்து அனுப்ப முடியாமல் போன உணவு மருந்துகளை ஈழத் தமிழருக்கு அனுப்பச் சிறிதும் முயற்சி எடுக்காத கலைஞர், பழைய கதை மறந்து ஊர் ஒப்பனைக்குத் தாமும் உதவிப் பொருட்களை அனுப்புவதாக நினைத்து அனுப்பினார். பதவி விலகல் என்ற துரோக நாடகத்தை நடத்திக் காட்டினார். பிரபாகரனை வன்முறையாளர் என்றார். கலைஞர் பதவியில் இல்லாதபோது  ஒன்றைச் சொல்வதும் பதவிக்கு வந்தால் இன்னொன்றைச் சொல்வதும் அவருக்கு கை வந்த கலை.
 
அரசியல் குத்துக்கரணங்களுக்கு கருணாநிதி பெயர் போனவர். அந்தக் கலையில் யாரும் அவரை மிஞ்ச முடியாது. வெல்லவும் முடியாது. ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பெப்ரவரி 1976 இல் கருணாநிதி அரசை கலைத்தவர் பிரதமர் இந்திரா காந்தி.  உடனே ‘356வது சட்டப் பிரிவை நீக்க வேண்டும்” என முழங்கினார் கருணாநிதி. பின் 1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சியை கலைக்க அதே இந்திரா காந்தியிடம் சொன்னார் கருணாநிதி; இந்திரா காந்தியும் அதை செய்தார். பின்னர் உ.பி அரசை அதே 356ஐ பயன்படுத்திக் கலைக்க கருணாநிதி ஆதரவு கொடுத்தார்.
 
சேதுகால்வாய்த் திட்டத்தை முடக்கியது காங்கிரஸ் அரசுதான். இராமன் பாலத்தைக் கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் தாக்கிவிட்டு அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் தேர்தல் ஆதாயத்தை மனதில் கொண்டு வழக்கை திருப்பிப் பெற்றுக் கொண்டது மத்திய அரசு. ஜெயலலிதாவை நோவதை விட மத்திய காங்கிரஸ் அரசை நோவதுதான் நாணயம். நாகரிகம்.
 
நீங்கள் தமிழீழ மக்களைக் பதவிக்காக பலிகொடுத்த கருணாநிதியை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதன் மூலம் உங்களது பெயரை வீணாகக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.