இலங்கை நிலைவரம் குறித்து அரசுடனும் புலிகளுடனும் தொடர்பு கொண்டு நோர்வே ஆலோசனை: சொல்ஹெய்ம்

erik_solheimஇலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அந்நாட்டு அரசுடனும் விடுதலைப்புலிகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது எழுந்துள்ள மோசமான நிலை குறித்து அந்நாட்டு பிரபல பத்திரிகை ஒன்றிற்கு நேற்று செவ்வாயக்கிழமை இரவு வழங்கிய பேட்டியிலேயே சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்,

உலகில் இன்று மிகமோசமான மனிதாபிமானப் பிரச்சினையுள்ள நாடு இலங்கையே. இங்கு யுத்தம் நடைபெறும் பிரதேசத்தில் ஒன்றரை இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரையான பொதுமக்கள் அனைவராலும் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்டுள்ளனர்.

அந்த மக்களுக்கு உணவோ, குடிநீரோ கிடைப்பதில்லை. மிக மோசமான ஆட்லறி ஷெல் தாக்குதல், விமானக் குண்டுவீச்சுக்கு இலக்காகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இலங்கையில் சுமுக நிலையை ஏற்படுத்த நோர்வே தீவிரமாகப் பாடுபடுகின்றது. வன்னியில் இருக்கும் மக்கள் தாங்கள் விரும்பும் பகுதிகளுக்குச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும். அரசும் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வரவேண்டும்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் புலிகளின் பிரதிநிதியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் நோர்வே தொடர்ந்தும் தொடர்புகளை மேற்கொண்டுள்ளது. எனினும் நோர்வேயின் அழுத்தம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்நிறுத்தம் ஒன்றிற்காக நோர்வே தொடர்ந்தும் தீவிரமாகப் பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.