இலங்கையில் போர் நிறுத்தம் அவசியம் வேண்டும்: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆர்வலர்கள்

மோதல் பிரதேசங்களில் சிக்கியுள்ள பொது மக்களை விடுவிக்க, அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய தாக்குதல்களினால், பொது மக்கள் பலர் வடக்கின் கரையோரப் பகுதிகளுக்குள் சென்று மிகச் சிறிய பிரதேசத்தினுள் அடைப்பட்டு கிடப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மோதல் பிரதேசங்களில் சிக்கி அவஸ்தைப்பட்டு, பாரிய அபாயங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரினால் நியமிக்கப்பட்ட இடம்பெயர்ந்தவர்களின் உரிமைகளுக்கான பிரதிநிதி வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவை அடிப்படையாக கொண்டியங்கும் வானொலி சேவை ஒன்றுக்கு நேற்று அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் இரத்த வெள்ளத்தை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கை இராணுவம், எஞ்சியுள்ள யுத்த பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் போது, நிச்சயமாக அந்த பிரதேசத்தில் உள்ள பொது மக்கள் பலரின் உயிர்கள் காவு கொள்ளப்படும்.

எனவே இந்த பிரச்சினைக்கு பொது மக்களின் இரத்த வெள்ளமே தீர்வாக அமைந்து விடும். எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது கட்டாயமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். ”

தமது இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டதன் பின்னரே இவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மோதல் பிரதேசங்களில் எஞ்சியுள்ள பொது மக்களை விடுவிக்க, இலங்கையின் இரண்டு தரப்பினரும் தற்காலிக போர் நிறுத்ததை அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கம், மோதல் பிரதேசங்களில் உள்ள மக்களின் உயிர்களை காப்பாற்றவும், அவர்களுக்கான சுகாதார மற்றும் அத்தியாவசிய மருத்துவ வசதிகளை மேற்கொள்ளவும், தொண்டு பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தினால் மோதல் தவிர்ப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்ட 20 சதுர கிலோமீற்றர் பரப்பில் எறிகணை வீச்சுக்களை மேற்கொள்ளாமல், அதனை போர் நிறுத்தப் பிரதேசமாக மதிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை கெலின் வலியுறுத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.