வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நாவிடம் ஒப்படையுங்கள்: நாடாளுமன்றத்தில் தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை

tna-logoவன்னி மக்களை இடம்பெயரச் செய்யாமல் அவர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களுக்கான பாதுகாப்பும் நலன்புரி வேலைத்திட்டங்களும் ஐ.நா.விடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்தில் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்தது.

இம்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் கிளஸ்ரர் குண்டுத்தாக்குதல்களை நிறுத்துமாறும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜாவே இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

வன்னியில் உள்ள மக்கள் மீது கிளஸ்ரர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. இதை நாம் நேரடியாகக் காணவில்லை. வன்னியில் இருந்து வரும் தகவல்கள்தான் கூறுகின்றன.

கிளஸ்ரர் குண்டுத் தாக்குதல்கள் நடத்துவது யுத்தத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று. இது தொடர்பாக சபையில் இருக்கும் வெளி விவகார அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.

முல்லைத்தீவில் சுமார் மூன்றரை இலட்சம் மக்கள் உள்ளனர் என்று அரச அதிபர் தெரிவித்துள்ளார். சுமார் 50 ஆயிரம் பேர் வவுனியா வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அப்படியாயின் மீதி மக்கள் எங்கே?

பட்டினி போட்டுக் கொல்வது திட்டமிட்ட இன அழிப்பு

வன்னிக்கு மிகக் குறைந்தளவிலேயேதான் உணவுப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. யுத்தத்தால் மாத்திரமன்றி பட்டினி போட்டும் மக்களை கொல்கிறது இந்த அரசு. இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.

அரசு மீண்டும் மீண்டும் இந்த மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றது. இந்தத் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். இம்மக்களின் பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சபை பெறுப்பேற்க வேண்டும்.

வன்னியில் இருந்து மக்களை அரசு இடம்பெயரச் செய்யக்கூடாது. அவர்கள் அவர்களின் சொந்த இடங்களில் தான் குடியமர்த்தப்படல் வேண்டும்.

அவர்களின் பாதுகாப்பையும் நலன்புரி வேலைத்திட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபைதான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.

தற்போது இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் மூன்று வருடங்களுக்குத் தொடர்ச்சியாக அங்கேயே தங்கவைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் துன்பம் குறித்து பேசும் உரிமை எமக்குண்டு

வன்னி மக்களின் இந்த அவலநிலை பற்றி நாடாளுமன்றில் நாம் செய்தியாளருக்கு விளக்கம் அளித்தோம் என எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் சி.ஜ.டி.யினரால் விசாரிக்கப்பட்டார். அந்த மக்களின் பிரதிநிதிகள் நாம். அவர்களின் துன்பம் பற்றிப் பேசும் உரிமை எமக்குண்டு.

தற்போது இந்த மக்களையெல்லாம் இடம்பெயரச் செய்து கொலை செய்து காயப்படுத்தி இலங்கை அரசு இந்தப் புதுவருடத்தில் இராணுவ வெற்றிகளைக் கொண்டாடப் போகின்றது.

அதனால் எமது மக்கள் இந்த வெற்றியைக் கொண்டாடமாட்டார்கள். அவர்கள் இந்தப் புதுவருடத்தினத்தை கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் சென்று அனுஷ்டிக்கவுள்ளனர்.

இது இவ்வாறிருக்க அரசு ஊடகங்களுக்கும் பூட்டுப் போட்டுள்ளது. “சுடர் ஒளி”யின் ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டார். பின்னர் அவர் கைது என பொலிஸார் அறிவித்தனர்.

சில நாள்கள் கழிந்து அதே நிறுவனத்தில் “உதயன்” பத்திரிகை அலுவலகத்திற்குக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. பத்திரிகை ஆசிரியர்கள் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு மிரட்டப்படுகின்றனர் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.