அனைத்துலக போர் சட்டவிதிகளை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும்: அமெரிக்கா, பிரித்தானியா வேண்டுகோள்

போர் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போதான அனைத்துலக சட்ட விதிகளை, சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மதித்து நடப்பது அவசியம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கில்லாறி கிளின்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hilary Clinton

Hilary Clinton

அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர், தமக்கு இடையிலான விரிவான கலந்துரையாடலின் பின்னர் அமெரிக்க பாதுகாப்பு செயலகத்தின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பொதுமக்களின் நிலைப்பாடு குறித்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இணைந்து வெளியிடும் கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் நாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள இராஜாங்க செயலகத்தில் கலந்துரையாடிய பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.

இலங்கையின் வடபகுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தாக்குதல்களினால் அங்கு உருவாகி வருகின்ற மோசமான மனிதாபிமான மனித அவல நிலைப்பாடுகள் குறித்து இருவரும் இன்று கலந்துரையாடினோம்.

இலங்கையில் தொடரும் நீண்டகால பிரச்சனைக்கு, அரசியல் தீர்வே சரியானது என்ற நிலைப்பாட்டை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறோம். அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தற்போது மிகச்சிறந்த தருணம் உருவாகியிருப்பதை நாம் அவதானிக்கிறோம். அதனால், நாம் தொடர்ந்தும் இணைத் தலைமை நாடுகளுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் சபை, அப்படியான அரசியல் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்வதற்கான செயற்பாட்டை முன்னெடுப்போம்.

கிளின்ரன் மற்றும் மிலிபான்ட் இருவரும் இணைந்து, சிறிலங்காவையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும், தற்காலிக தாக்குதல் அற்ற காலப்பகுதிக்கு ஒத்துக் கொள்ளுமாறு கோருகிறோம்.

பொதுமக்களை அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிப்பது இரு பகுதியினதும் கடப்பாடு. பொதுமக்கள், போர்ப் பகுதிகளை விட்டு வெளியேறுவதற்கும், மனிதாபிமான பணியாளர்களும் அமைப்புக்களும் அப்பகுதிகளுக்குள் செல்வதற்கும், இரு தரப்பும் அனுமதிக்க வேண்டும்.

இலங்கையின் வடபகுதியில் தொடரும் போரின் போது இடையில் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கரிசனை குறித்து, ரோக்கியோ இணைத் தலைமை நாடுகள் இணைந்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பை நாம் வரவேற்கிறோம்.

இணைத் தலைமை நாடுகள் கேட்டுக்கொண்டபடி, சிறிலங்கா அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும், பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது எதுவித தாக்குதலையும் நடத்த வேண்டாம் என்று கோருகிறோம்.

குறிப்பாக, புதுக்குடியிருப்பு மற்றும் ஏனைய மருத்துவமனைகளையும் அதற்கு அருகே அமைந்துள்ள சிறிலங்கா அரசு அறிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீதும், இரு தரப்பும் தாக்குதல் எதையும் நடத்துவதைத் தவிர்ப்பது அவசியம். அங்கு 500-க்கும் அதிகமான பொதுமக்கள் அகதிகளாக அடைக்கலம் புகுந்து மருத்துவ வசதிகளைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், போர் நடைபெறும் பகுதிகளில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் சென்றடைவதை, இரு தரப்பும் உறுதி செய்வதுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் அங்கு அகப்பட்டுள்ள மிக அவசர மருத்துவ உதவி தேவைப்படும் மக்களை அங்கிருந்து வெளியேற்றவும் ஆவன செய்ய வேண்டும்.

போர் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போதான அனைத்துலக சட்ட விதிகளை, சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மதித்து நடப்பது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.