இலங்கையில் எதுவும் நடக்காதது போன்று முதலமைச்சர் மெளனம் சாதிப்பது கண்டனத்திற்குரியது: ஜெயலலிதா

jayalalithaஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை தட்டிக்கேட்டு, அதற்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பாரேயானால் சிறிலங்கா அரசுக்கான மத்திய அரசின் உதவி அன்றே நிறுத்தப்பட்டிருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய நாடளுமன்றத்திற்கான தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக தொடங்கியுள்ள நிலையில் செல்வி ஜெயலலிதாவின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலய பகுதிகளுக்குள் இரண்டு லட்சம் தமிழர்கள் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும், அந்தப் பகுதியை சுற்றி வளைத்து சிங்கள இராணுவம் நச்சுக் குண்டுகளை வீசுவதாகவும், நந்திக் கடல் பகுதிக்கு மேற்கே உள்ள பகுதியை சிறிலங்கா இராணுவம் சுற்றிவளைத்து விட்டதாகவும், இந்த பகுதியின் மீது சிங்கள இராணுவம் தாக்குதல் நடத்தினால் மேலும் மூன்று லட்சம் தமிழர்களின் உயிருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தச் சம்பவம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் மீது ஈவு இரக்கமின்றி சிங்கள இராணுவம் நடத்தும் கோரத் தாக்குதலைக் கண்டித்து இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, நோர்வே உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் போராட்டங்களில் ஈடுபட்டு, தமிழர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்காக உலகத்தில் உள்ள தமிழர்களின் குரல்கள் எல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில், இலங்கையில் எதுவுமே நடக்காதது போல திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதலமைச்சர் கருணாநிதி மெளனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தற்போது இலங்கைத் தமிழர்களை காக்கவுள்ள ஒரே வழி உடனடி போர் நிறுத்தம் தான். அதைத் தவிர வேறு வழியில்லை. தமிழர்கள் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி அங்கு உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் என செல்வி ஜெயலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.