புலம் பெயர் நாடுகளில் மக்கள் பேரெழுச்சி பல நாடுகளில் போலீஸாரின் தாக்குதல் ! டென்மார்க்கில் 83 பேர் கைது ! தொடர்கிறது போராட்டங்கள்!

dk-83வன்னியில் சிறீலங்கா அரசு நடாத்தும் படுகொலைகளை உடன் நிறுத்தக் கோரியும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரி சகல புலம் பெயர் நாடுகளிலும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் திரண்டுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழரிடையே வரலாறு காணாத பேரெழுச்சி ஆரம்பித்துள்ளது.

டென்மார்க்கில் வெளிநாட்டு அமைச்சுக்கு முன்னால் ஆர்பாட்டங்களை நடாத்திய தமிழ் மக்களை அப்பகுதியில் இருந்து தாம் வெளியேற சொன்னதாகவும், அவர்கள் அதற்கு மறுத்த காரணத்தால் 83 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். கைதான அனைவரும் சுமார் ஆறு மணி நேரம் தடுப்புக்காவலில் வைக்கப்படுவர் என்று தலைநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த தை மாதத்தில் இருந்து 2800 தமிழ் மக்கள் சிங்கள இனவாத இராணுவத்தால் மானிடப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த அவலத்தைத் தட்டிக் கேட்காத சர்வதேச அரசுகளிடம் நீதிகேட்டு இம்மக்கள் வந்துள்ளனர் என்றும் தொலைக்காட்சி சேவை இரண்டு எழுதியுள்ளது. மாலை ஐந்து மணிவரை போலீசார் அங்கு நிற்க அனுமதித்தாலும் ஆர்பாட்டம் செய்வோர் போக மறுத்து ஆர்பாட்டத்தைத் தொடர்வதாகவும் எழுதியுள்ளது.

இதேவேளை நாளை ஊர்வலத்தில் பங்கேற்க பெருந்தொகையான டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் வாகனங்களில் இரவோடு இரவாக பயணிப்பதாக தெரிய வருகிறது. போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளை ஆண் பெண் என்ற பேதமின்றி முடுக்கி விட்டாலும், அனைத்துத் தமிழ் மக்களும் சகல இன்னல்களையும் தாயக மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக சந்தித்தபடி உள்ளனர். இங்கிலாந்தில் ஆரம்பித்த பேரெழுச்சி தற்போது வரலாறு காணாத மக்கள் போராட்டமாக வெடித்து வருகிறது.

 தமிழ் மக்கள் போராட்டம் குறித்து ஐரோப்பாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் தமது கவலைகளை தெரிவித்துள்ளார்கள். அதேவேளை யுத்த நிறுத்தத்திற்கான அழுத்தங்கள் பல தரப்பிலிருந்தும் போயிருந்தாலும் சிறீலங்கா அரசாங்கம் யுத்தத்தை நிறுத்தினால் புலிகள் மறுபடியும் தம்மை சீர்படுத்திவிடுவார்கள் என்று கூறி வருவதாக மேலைத்தேய அரசியல் தலைவர்களில் சிலர் கூறியுள்ளனர். போரில் சிறிய இடைவெளி விட்டாலே போதும் தமது இராணுவத்திற்கு சாவு மணி அடித்த கதையாகிவிடும் என்று சிங்கள அரசு பயப்படுவதாக உத்தியோக பூர்வமற்ற முறையில் சில வெளிநாட்டு தலைவர்கள் கருத்துரைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஆனால் இப்போது ஆரம்பித்துள்ள போராட்டங்கள் யுத்தம் நிறுத்தப்படாமல் நிறுத்தப்பட மாட்டாது என்று ஆர்பாட்டக்காரர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.