பாதுகாப்பு பிரதேசத்திற்குள் உள்ள மக்களின் மீது பாரிய தாக்குதலை தொடுக்க சிறீலங்கா அரசு ஆயத்தமாகி வருகின்றது

usa20sarath20fonsekaகடந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற சமர் ஒரு மந்தமான நிலையை கடந்த இரண்டு நாட்களாக அடைந்துள்ள போதும் இன்று புதன்கிழமை இராணுவம் பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு பிரதேசங்களின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை பாதுகாப்பு பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல்களையும், கனரக துப்பாக்கி தாக்குதல்களையும் மேற்கொண்ட இராணுவத்தினர் விடுதலைப் புலிகளை சரணடைய கூறி ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தல்களையும் விடுத்து வருவதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தாம் விடுதலைப் புலிகளை சரணடைய கூறி ஒலிபெருக்கிகளில் அறிவித்து வருவதை படைத்தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விடுதலைப் புலிகள் பாதுகாப்பு பிரதேசத்திற்குள் நிலைகொண்டுள்ளதாகவும், அவர்கள் சரணடையாத நிலையில் தாம் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் படைத்தரப்பு உலகினை நம்பவைக்க முற்பட்டு வருகின்றது.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒலிபெருக்கி அறிவித்தல்களை தொடர்ந்து பாதுகாப்பு பிரதேசங்களில் பாரிய குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளரும் அரச தலைவரின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்சாவினால் நடத்தப்படும் பாதுகாப்பு இணையத்தளம் (www.defence.lk) இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு பிரதேசமான 18 சதுர கி.மீ பரப்பளவினுள் 300,000 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற போதும் அங்கு 70,000 பேரே உள்ளதாக அரசும், 40,000 பேர் உள்ளதாக படைத்தரப்பும் தகவல்களை வெளியிட்டு வருவதும் அங்கு ஒரு மனித பேரழிவை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டு வருவதையே காட்டுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் கருத்தும் அதனையே வலியுறுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) ஆனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற சமரினை தொடர்ந்து திங்கட்கிழமை சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்காவை அவசரமாக சந்தித்து களநிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியதும், அடுத்த கட்ட நடவடிக்கைக்கான வரைபடைங்களை பார்வையிட்டதும் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே கடந்த வார சமரில் சிறீலங்கா இராணுவத்தின் முதலாவது சிறப்பு படையணி (SF1) அழிவுகளை சந்தித்த நிலையில் தற்போது இராணுவம் தனது இரண்டாவது சிறப்பு படையணியை (SF2) பாதுகாப்பு பிரதேசங்களின் மீதான தாக்குதலுக்கு தயார்படுத்தி வருவதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த அணியினர் தமது தாக்குதல்களை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக பீரங்கிகள், கனரக துப்பாக்கிகள் சகிதம் இலகுகாலாட் படையினரையும், ஐந்தாவது கவசத்தாக்குதல் படையணியையும், பீரங்கி படையணியையும் அதிகளவில் பயன்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இராணுவம் கனரக ஆயுதங்களை செறிவாக பயன்படுத்தியவாறு மக்கள் செறிவாக வாழும் இந்த பிரதேசத்திற்குள் நுளையுமாக இருந்தால். ஒரு குறுகிய நேரத்திற்குள் மிகப்பெரும் மனித பேரழிவு ஒன்று வன்னியில் நிகழலாம் என்பதை பல ஆய்வாளர்கள் அதிர்ச்சியுடன் எதிர்வு கூறி வருகின்றனர். இது இரண்டாவது உலக போரின் பின்னர் நிகழப்போகும் மிகப்பெரும் பேரழிவாகும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்ட தவறவில்லை.

இந்த பேரழிவை தடுப்பதற்கு முன்வராது அனைத்துலக சமூகம் தற்போதும் மௌனம் காத்து வருவது மிகவும் வேதனையானது. இந்த போரை நிறுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கும், மேற்குலகத்திற்கும் உண்டு. ஏனெனில் சிறீலங்கா இராணுவத்தின் போரிடும் வலு உடைக்கப்பட்ட நிலையில் 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசாணையுடன் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தை சீர்குலைத்தவர்கள் இவர்கள் தான்.

போர் நிறுத்த காலப்பகுதியில் மேற்குலகமும் இந்தியாவும் சிறீலங்கா இராணுவத்தினை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது வெளிப்படையானது. இந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளை பல நாடுகள் தடை செய்தது போரின் மீதான சிங்கள மக்களின் நம்பிக்கைகளை அதிகரித்திருந்தது. அதாவது தற்போதைய பேரழிவை உருவாக்கியதில் பெரும்பங்கு அனைத்துலகத்திற்கு உண்டு. எனவே அனைத்துலகத்தின் மௌனங்களை கலைத்து எமது மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டிய பாரிய கடமை ஒன்று அனைத்துலகிலும் பரந்து வாழும் தமிழ் மக்களின் தோள்களில் உள்ளது.

சிறீலங்கா அரசின் போரின் வேகத்தை விட தமிழ் மக்களின் போராட்டத்தின் வேகம் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் அனைத்துலகத்தின் கண்களில் மண்ணைதூவி விட்டு சிறீலங்கா அரசு வன்னி மக்கள் மீதான மனிதப்படுகொலைகளை மிகவிரைவாக ஆரம்பிக்க திட்டமிட்டுவருவதாகவே படைத்தரப்பு தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.