அனைத்துலக வலியுறுத்தல்கள் ‐ உடனடி யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்வது கட்டாயமானதாகும் ‐ விக்கிரமபாகு

vickramabahuஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்துலகத்தின் வலியுறுத்தல்களுக்கமைய இலங்கை அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்வது கட்டாயமானதாகும் எனவும், இதன் மூலமே இங்கு இடம்பெற்று வருகின்ற மனிதப் பேரவலங்களைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் இடதுசாரி முன்னணி தெரிவிக்கின்றது.

மனித அவலங்களை ஏற்படுத்தாமலும் மக்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் யுத்த நிறுத்தத்திற்குச் செல்வதே பொருத்தமானது என்ற சர்வதேச வற்புறுத்தல்கள் குறித்து கேட்டபோதே இடதுசாரி முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இவ்வாறு கூறினார்.
 
மேற்கத்தேய நாடுகளில் தான் பங்குபற்றிய பல கூட்டங்களில் வடக்கில் இடம்பெற்று வருகின்ற பேரவலம் மற்றும் அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற செயல்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிட்டமையாலேயே அரசாங்கம் தமக்கு எதிராகவும் செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
மேலும், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று அவசியம் என்பதை இடதுசாரி முன்னணி மாத்திரமே பகிரங்கமாக கூறிவந்ததாகவும், இலங்கையின்; இன்றைய தேவைகளையும் உணர்ந்து கொண்டதன் பிரதிபலனாகவே சர்வதேசம் இங்கு யுத்த நிறுத்தம் வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
மக்களைக் கொன்று குவித்து, அதன் மூலம் யுத்தத்தை விரைவாக முடித்துக் கொள்ளவே அரசு நினைப்பதாகவும் இது ஒருகாலும் நடைபெறப் போவதில்லை எனவும் இடதுசாரி முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.
 
மீட்கப்படாத பிரதேசங்களில் 70 ஆயிரம் மக்களே இருப்பதாகக் கூறுவதை நாம் மட்டுமல்ல, சர்வதேசம் கூட நம்பத் தயாரில்லை என தெரிவித்த அவர் அரசாங்கம் தனது குடிமக்களைப் பாதுகாக்க வேண்டுமானால் சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலுக்கமைய அவசரமானதும்  அவசியமானதுமான யுத்த நிறுத்தமொன்றுக்கு சென்றேயாக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.