வன்னி நிலை தொடர்பாக மகிந்தவுடன் தொலைபேசியில் ஐ.நா. செயலாளர் நாயகம் அவசர பேச்சு

ban-ki-moonவன்னிப் பிராந்தியத்தில் மோசமடைந்து செல்லும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அவசரமாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

லிபியாவில் தற்போது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் மகிந்த ராஜபக்சவுடன் நேற்று வியாழக்கிழமை இரவு தொடர்புகொண்ட பான் கி மூன், வன்னியில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாக முக்கிய பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் இழப்புக்கள் அதிகரித்து வருவதால் போர் நிறுத்தம் செய்யப்படுவது அவசியம் என ஐ.நா. செயலாளர் நாயகம் முதலில் வலியுறுத்தியிருக்கின்றார்.

இருந்த போதிலும் கடந்த வாரம் வெளியிட்டிருந்த மற்றொரு அறிக்கையில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

தற்போது பெருந்தொகையான பொதுமக்கள் அடைக்கலம் புகுந்துள்ள ‘பாதுகாப்பு வலயம்’ மீது சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே நேற்று இரவு மகிந்தவுடன் அவசரமாகத் தொடர்பு கொண்ட ஐ.நா. செயலாளர் நாயகம் வன்னி நிலைமை தொடர்பாகப் பேசியுள்ளார்.

பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைமைகள் தொடர்பில் தனது அக்கறையை ஐ.நா. செயலாளர் நாயகம் இந்தப் பேச்சுக்களின் போது வெளிப்படுத்தினார்.

இதற்குப் பதிலளித்த மகிந்த, பொதுமக்களுடைய நிலைமை தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் கொண்டுள்ள அக்கறையை தன்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாகத் தெரிவித்தார்.

பொதுமக்களுடைய பாதுகாப்பையிட்டு அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இந்தப் பேச்சுக்களின் போது ஐ.நா. செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.