போரைத் தூண்டிய அனைத்துலக சமூகம் தான் அதனை நிறுத்தவும் முன்வர வேண்டும்

arush_eelamurasu_smallபோர் நிறுத்த காலத்தில் சிறீலங்காவின் படை கட்டமைப்புக்களை பலப்படுத்தி அமைதி உடன்பாட்டை சீர்குலைத்ததில் மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் பங்களிப்புக்கள் ஏராளம். எனவே போரை தூண்டிய அவர்களுக்கு தான் அதனை நிறுத்தும் கடமையும் உள்ளது என படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசு வாரஏட்டிற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு:

கேள்வி: கடந்த 5 ஆம் நாளன்று ஆனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற சமர் தொடர்பாக பல முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன அது தொடர்பாக உங்களின் பார்வை என்ன?

பதில்: ஆனந்தபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல்களை நோக்கும் போது இரு தரப்பும் தமது பலத்தை பரீட்சித்து பார்த்த களம் அது என கூறினாலும் தவறில்லை. இராணுவம் விடுதலைப்புலிகளை ஒரு பெட்டிவடிவ முற்றுகைக்குள் கொண்டுவந்து விட்டதாக எண்ணியிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் அவர்களை ஒரு பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டுவந்திருந்தனர்.

இந்த முற்றுகையை பயன்படுத்தி இராணுவத்தின் போரிடும் வலு கொண்ட எஞ்சிய படையினரையும் அழிப்பதே விடுதலைப்புலிகளின் உத்தி. அவர்கள் அதனை சாதித்துள்ளதாகவே களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

அங்கு கடந்த 2 ஆம் நாளில் இருந்து மோதல்கள் நடைபெற்ற போதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) அதிகாலை படைத்தரப்பு பரியதொரு தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகளின் அணிகள் சனிக்கிழமை நள்ளிரவு தாக்குதலை ஆரம்பித்து விட்டன. தாக்குதல் ஏறத்தாள 6 மணிநேரம் உக்கிரமாக நிகழ்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இராணுவத்தின் முற்றுகையை உடைத்துக்கொண்ட விடுதலைப்புலிகளின் பெருமளவான அணிகள் தளம் திரும்பிவிட்டன. இராணுவத்தரப்பில் இந்த மோதலில் 1450 மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 2000 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சமரின் பின்னர் இராணுவம் எடுத்துவரும் ஓய்வும் அதனையே காட்டுகின்றது.

இராணுவத்தின் இலத்திரனியல் தகவல்களை விடுதலைப்புலிகள் இடைமறித்து கேட்பதன் மூலம் இந்த தகவல்களை பெற்று வருகின்றனர். மோதல் என்னும் போது இரு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்படுவதுண்டு. அதிலும் தற்போதைய மோதல்கள் உக்கிரமானவை. இந்த மோதலில் இராணுவம் ஆறு மணிநேரத்தில் 100,000 இற்கு மேற்பட்ட எறிகணைகளை ஏவியதாக விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் இருந்து களமுனயின் உக்கிரத்தை நீங்கள் கணிப்பிட்டுக்கொள்ளலாம். எனினும் இந்த தாக்குதல் பூரண வெற்றி அளித்துள்ளதாகவே விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேள்வி: இந்த சமரில் பெருமளவான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அரசு தெரிவிக்கும் கருத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை?

பதில்: சிறீலங்கா அரசுகளை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் விடுதலைப்பேராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறிய காலப்பகுதியில் இருந்து தற்போது வரை பரப்புரை போரை அதிகப்படியாக முன்னெடுத்து வருவது நாம் அறிந்தைவையே.

ஆனால் தற்போதைய அரசு இதனை மிகவும் பாரிய அளவில் மிகுந்த பொருட் செலவில் நடாத்தி வருகின்றது. எத்தனையே தென்னிலங்கை ஊடகங்களை தனக்கு சார்பாக விலைகொடுத்து அரசு வாங்கியுள்ளது. ஏனைய ஊடகங்களை வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு அடக்கியுள்ளது.

எனவே தற்போதைய நிலையில் அரசு கூறும் தகவல்கள் தான் தென்னிலங்கையை மட்டுமல்லாது அனைத்துலக ஊடகங்களையும் அதிகளவில் கவர்ந்து வருகின்றன. ஆனால் களமுனையின் யதார்த்தம் அத்தகையது அல்ல. சிறீலங்கா அரசு கூறுவது போல இராணுவத்தினாரின் முற்றுகைக்குள் விடுதலைப்புலிகளின் அணிகள் முற்றாக சிக்குண்டு அழிவை சந்தித்திருந்தால் களமுனைகளில் சடலங்கள் சிதறிக்கிடப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.

தப்பியோடும் ஒரு சில போராளிகளால் சடலங்களை புதைக்கவே அல்லது எடுத்துச் செல்லவோ முடியாது. அவ்வாறான ஒரு துன்பமான நிகழ்வுகளை நாம் இடிமுழக்கம் படை நடவடிக்கைக்கு எதிரான சமர், கொக்குத்தொடுவாய் படை தளங்கள் மீதான தாக்குதல்களின் போது 1995 களில் சந்தித்திருந்தோம்.

ஆனால் கடந்த வார சமரில் களமுனைகளில் கொல்லப்பட்டு கிடந்த 15 இற்கும் குறைவான சடலங்களை தான் ஆரம்பத்தில் அரசு காண்பித்திருந்தது. பின்னர் உருக்குலைந்த சடலங்கள் பலவற்றை காண்பித்திருந்தது. படையினர் காண்பித்த மொத்த சடலங்களும் 100 இற்கும் குறைவானவை. மேலும் தற்போதைய சமர்களில் மரணத்தை தழுவும் தமது உறுப்பினர்களை களமுனைகளில் புதைத்துவிட்டே விடுதலைப்புலிகள் தளம் திரும்புகின்றனர். சிறீலங்கா படையினரின் எறிகணை வீச்சுக்களால் கொல்லப்பட்ட பல பொதுமக்களின் சடலங்களும் ஆனந்தபுரம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தன.

சிறீலங்கா படையினர் காண்பித்த சடலங்களில் பெரும்பாலனவை புதைக்கப்பட்ட பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட அடையாளங்களை கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. எனவே போலியான பிரச்சாரங்களின் மூலம் சிறீலங்கா அரசு ஒரு உளவியல் போரை மேற்கொண்டு வருகின்றது என்பது தான் உண்மை.

கேள்வி: இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த விடுதலைப்புலிகளின் அணிகளை மீட்பதற்கு கடற்புலிகள் முயன்றதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன?

பதில்: மோதல் நடைபெற்ற பகுதியின் பூகோள அமைப்பை கருதினால் இந்த தகவலின் உண்மை தன்மை புரியும். ஆனந்தபுரம் எல்லாபக்கமும் நிலத்தினால் சூழப்பட்ட பிரதேசம் அங்கு கடற்புலிகள் தரையிறங்க முடியாது. இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் கடற்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனால் அது அலம்பில் கடற்பரப்புக்கு அண்மையாக நிகழந்துள்ளது. அலப்பில் முல்லைத்தீவில் இருந்து 10 கி.மீ தென் திசையில் உள்ளது. மேலும் விடுதலைப்புலிகளுக்கு இராணுவத்தின் முற்றுகையை உடைத்துகொண்டு தப்பியோட வேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் இராணுவத்திற்கு ஒரு முற்றுகையை ஏற்படுத்தும் முகமாக இந்த முற்றுகையை ஏற்படுத்தியவர்களே அவர்கள் தான். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.

கேள்வி: அனைத்துலக நாடுகளிலும் தற்போது நிகழந்துவரும் போராட்டம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் முன்னர் கூறியது போல தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள மனித பேரழிவுகள் தொடர்பான அனைத்துலகத்தினது நகர்வுகள் மிகவும் மெதுவாகவே உள்ளன. இந்த கால அவகாசத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ள சிறீலங்கா அரசு தனது அனைத்து வளங்களையும் ஒன்று குவித்து மிகப்பெரும் தாக்குதலை தொடுக்க திட்டமிட்டுள்ளது.

தற்போதைய களமுனைகயை பொறுத்தவரையில் இராணுவம் தனது கவசப்படையையும், செறிவான பீரங்கி தாக்குதல்களையும் பயன்படுத்துவதுடன், தரைப்படையினர் 23 மி.மீ, 30 மி.மீ போன்ற இலகுரக பீரங்கிகளையும், 12.7 மி.மீ ரக கனரக துப்பாக்கிகளையும் தரை நடவடிக்கைகளில் அதிகளவில் பயன்படுத்தியும் வருகின்றனர். எனவே அவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாதுகாப்பான பிரதேசத்திற்குள் இராணுவம் புகுந்தால் பாரிய மனித பேரழிவு ஒன்று ஏற்படும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

தற்போது புதுக்குடியிருப்பு முழுவதையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள அரசு பாதுகாப்பான பிரதேசத்தை நோக்கி ஐந்து முனைகளில் நகர முற்பட்டு வருகின்றது. இந்த பிரதேசத்தில் மோதல்கள் ஆரம்பிக்குமாக இருந்தால் அங்கு குறுகிய நேரத்தில் பாரிய அழிவு ஏற்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது. எனவே அதனை தடுக்க வேண்டிய கடமை உலெகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு உண்டு.

சிறீலங்கா அரசின் போரின் வேகத்தை விட தமிழ் மக்களின் வேகம் அதிகமாக இருத்தல் வேண்டும் என்பது தான் இன்றைய தேவை.

கேள்வி: அனைத்துலக சமூகத்திற்கு இந்த போரை நிறுத்த வேண்டிய கடப்பாடு உள்ளதா?

பதில்: இந்த போரை நிறுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கும், மேற்குலகத்திற்கும் உண்டு. ஏனெனில் நான் ஏற்கனவே பல தடவைகள் கூறியது போல பொஸ்னியாவில் மேற்கொள்ளப்பட்ட அமைதி நடவடிக்கையின் போது இரு தரப்பும் சம வலுவுள்ள நிலையில் இருந்தால் தான் நியாயமான தீர்வை எட்ட முடியும் என்ற சமன்பாடுகளை வகுத்திருந்த மேற்குலகம் தமிழ் மக்களுக்கு மறுதலையான கொள்கைகளை பின்பற்றி துரோகம் இழைத்துள்ளது.

2001 ஆம் ஆண்டு சிறீலங்கா இராணுவத்தின் போரிடும் வலு உடைக்கப்பட்ட நிலையில் தான் 2002 ஆம் ஆண்டு ஒரு போர் நிறுத்த உடன்பாடு நோர்வேயின் அனுசாணையுடன் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த காலப்பகுதியில் மேற்குலகமும் இந்தியாவும் சிறீலங்கா இராணுவத்தினை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடபட்டிருந்தது துர்ப்பாக்கியமானது.

இந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளை பல நாடுகள் தடை செய்ததும் அமைதி உடன்படிக்கை மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை சிதைத்ததுடன், போரின் மீதான சிங்கள மக்களின் ஆர்வத்தை அதிகரித்திருந்தது. இவர்களின் இந்த நடவடிக்கை தான் போர் நிறுத்தத்தை சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக புறம் தள்ளும் நிலையை எற்படுத்தியிருந்தது.

மேலும் ஒரு சிறிய உதாரணத்தை கூறுகின்றேன். “வருங்கால போரில் விடுதலைப்புலிகள் வலிமை மிக்க சிறீலங்கா இராணுவத்தினரை எதிர்கொள்ள நேரிடும்” என 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்காவுக்கான அமெரிக்காவின் தூதுவராக கடமையாற்றிய ஜெஃப்ரி லுன்ஸ்ரெட் (துநககசநல டுரளெவநயன) எச்சரிக்கை விடுத்திருந்ததையும் நாம் மறந்துவிட முடியாது.

அதாவது சிறீலங்காவின் படை கட்டமைப்புக்களை பலப்படுத்தி அமைதி உடன்பாட்டை சீர்குலைத்ததில் மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் பங்களிப்புக்கள் ஏராளம். எனவே போரை தூண்டியவர்களுக்கு தான் அதனை நிறுத்தும் கடமையும் உள்ளது.

கேள்வி: சிறீலங்காவில் நடைபெறும் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என சீனா தெரிவித்துள்ளது தொடர்பாக எதனை கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: இது சீனாவின் கருத்து மட்டுமல்ல அனைத்துலகத்தின் பல நாடுகளும் இவ்வாறு கருத்துக்களை தெரிவித்து தான் எமது பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள வழிதேடுகின்றன. ஆனால் நான் ஒன்றை மட்டும் இங்கு கேட்கின்றேன் சிறீலங்காவில் நடைபெறும் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றால் விடுதலைப்புலிகளை ஏன் உலக நாடுகள் தடை செய்துள்ளன. அதுவும் அவர்களின் உள்நாட்டு பிரச்சனை என்று ஒதுங்கியிருந்திருக்கலாம் தானே.

மேலும் விடுதலைப்புலிகள் எந்த நாட்டு மக்களுக்கும் தீங்கிழைக்கவி;ல்லை. பலஸ்தீன கெரில்லாக்கள் செய்தது போல வெளிநாட்டவர்களை அவர்கள் சிறைப்பிடிக்கவில்லை, அவர்களை படுகொலை செய்யவில்லை, வெளிநாட்டவர்களின் விமானங்களை கடத்தவில்லை. எப்போதும் அனைத்துலகததின் சட்டவிதிகளை மதித்தே நடந்து வந்துள்ளனர்.

எனவே அனைத்துலக சமூகம் தமது பூகோள அரசியலுக்காக தமிழ் மக்களுக்கு காலம் காலமாக துரேகம் இழைந்து வந்துள்ளதுடன் தற்போது தமது துரோகத்தனங்களை நியாயப்படுத்தவும் முற்பட்டு வருகின்றன.

கேள்வி: நடைபெறப்போகும் இந்திய தேர்தலில் தமிழக மக்களின் கடமை என்ன?

பதில்: தமிழ் மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு உலகில் இல்லை. எமது இனம் உலகின் வல்லாதிக்க சக்திகளின் கோரப்பிடியிலும், சிங்கள அரசின் இன அழிப்பிலும் சிக்கி பேரழிவை எதிர்கொண்டு நிற்கும் இந்த தருணத்தில் தான் எமது இனத்திற்கு என்று ஒரு நாடு இல்லாதது எவ்வளவு தவறானது என்பதை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.

தேசம் அற்ற இந்த இனமும் விரைவில் அழிந்துவிடும் அது இயற்கையே. எனெனில் தனக்கு என ஒரு நாடு அற்ற எந்த இனமும் நிலைத்து நின்ற வரலாறுகள் குறைவு.

உலகில் அருகிவரும் உயிரினங்களை காப்பாற்றுவதற்கு பல நாடுகளும், அமைப்புக்களும் முன்நின்று உழைக்கின்றன. ஆனால் தமது இனத்தை காப்பாற்ற உலகில் ஏறத்தாள 70 மில்லியன் தமிழ் மக்களை கொண்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் பின்நிற்பது கொடிய வேதனை. குடும்ப அரசியல், கட்சி பேதங்கள் என்பவற்றிற்கு அப்பாற்பட்டது இன உணர்வு.

இன உணர்வுள்ள தலைவர்களை வருங்காலத்தில் தெரிவு செய்ய வேண்டியது தமிழக மக்களின் தலையாய கடமை, காலத்தின் தேவையும் அது தான். அதன் மூலம் தான் தமது இனத்தின் வாழ்வுக்காக தீயில் கருகும் எமது உறவுகளை அவர்களால் காப்பாற்ற முடியும் என்பது மட்டுமல்லாது தமிழ் என்றெரு இனம் நீண்டகாலம் வாழவும் வழி பிறக்கும்.

கேள்வி: தற்போது நடைபெற்றுவரும் போரில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வளவு?

பதில்: இதற்கு பதில் கூறுவதாக இருந்தால் பல மணி நேரம் எடுக்கும். எனவே சுருக்கமாக கூறுவதாக இருந்தால் தற்போதைய போரை சிறீலங்கா சார்பாக இந்திரா காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசே வழிநடத்தி வருகின்றது. போரில் இந்திய படையினரை நேரடியாக களமிறக்கினால் அது உலகில் பல வாதப்பிரதி வாதங்களை தோற்றுவிக்கும் என்பதற்காக சிறீலங்கா படை சிப்பாய்களை முன்னிறுத்தி இந்த போரை இந்தியா வழிநடத்தி வருகின்றது.

தொழில்நுட்ப உதவிகள், படைக்கல உதவிகள், போர் மூலேபாய ஆலோசனைகள், வரைபட விளக்கங்கள், சமர்களில் நேரடியாக ஈடுபடும் பற்றலியன் படை அதிகாரிகளுக்கான தொடர் பயிற்சிகள், போரினால் சீரழியும் சிறீலங்கா அரசுக்கு தேவையான பொருளாதார உதவிகள் அனைத்தையும் இந்திய மத்திய அரசே வழங்கி வருகின்றது.

சிறீலங்கா அரசு 2008 ஆம் ஆண்டு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகிக் கொண்டதற்கு அன்பளிப்பாக வாரகா என்படும் 1750 மில்லியன் இந்திய ரூபாய்கள் பெறுமதியான 74 மீ நீளமான ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இந்திய அரசு வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது புதுக்குடியிருப்பில் நடைபெற்றுவரும் மோதல்களில் படையினர் விடுதலைப்புலிகளின் நிலையிடங்களை துல்லியமாக கண்டறிந்து தாக்குவதற்கு தேவையான தொலைதொடர்பு சாதனங்களின் நிலையிடங்களை கண்டறியும் சாதனங்களை இந்திய அரசு பெருமளவில் வழங்கியுள்ளது. இவை தவிர இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் ஏராளம்.

உதாரணமாக வான்பாதுகாப்புக்கு என இந்திய அரசு வழங்கிய எல்-70 ரக 40 மி.மீ பீரங்கிகளை தற்போது படையினர் புதுக்குடியிருப்பு களமுனைகளில் மக்கள் மீதான நெடுந்தூர தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை சுருக்கமாக கூறினால் தற்போதைய போரில் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்களின் குருதிக்கறைகள் இந்திய மத்திய அரசின் கைகளில் தான் அதிகம் படிந்துள்ளது.

கேள்வி: வன்னியில் தற்போது ஏற்பட்டுள்ள பேரனர்த்தமான நிலையில் படைத்துறை ரீதியான ஆய்வுகள் தேவையற்றவை என்ற கருத்துக்களை சில தமிழ் ஊடகங்கள் முன்வைத்து வருவதன் அர்த்தம் என்ன?

பதில்: சிறீலங்கா அரசுகளிடம் இருந்து எமது உரிமைகளை அகிம்சை வழியில் பெற்றுக்கொள்ள முடியாது என்ற ஒரு நிலை தோன்றிய பின்னர் தான் தமிழ் இனம் ஆயுதம் தரித்துக் கொண்டது.

இந்த உண்மை தற்போது அனைத்துலக சமூகத்திற்கும் புரிந்திருக்கும். ஆயுதப்போராட்டங்களின் மூலம் சிறீலங்கா அரசின் போரிடும் வலுவை முறியடித்த பின்னர் தான் அரசியல் தீர்வு தொடர்பாக நாம் அவர்களுடன் பேச முடியும் என்பதை தமிழ் மக்கள் தற்போதும் வலுவாக நம்புகின்றனர்.

தாயகத்தில் உள்ள எமது மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி தமது விடுதலைக்காக போராடவேண்டும் என்ற ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் தற்போது நிற்கின்றோம். இந்த தருணத்தில் படைத்துறை அறிவு எமக்கு தேவையற்றது என்று கூறினால் அதன் உள்ளாந்த அர்த்தம் என்ன என்பதை நீங்கள் தான் ஊகித்துக் கொள்வேண்டும்.

மேலும் ஒரு சமூகம் என்பது பல துறைகளை சார்ந்தவர்களை கொண்டது. அங்கு அரசியல் ஆய்வாளரும் இருப்பர், சமூகவியல் ஆய்வாளரும் இருப்பர், உளவியல் ஆய்வாளரும் இருப்பார், படைத்துறை ஆய்வாளரும் இருப்பார், ஏன் சமயல்துறையில் ஆய்வு செய்பவர்களும் இருப்பார்கள் ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அது பயனுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.