சென்னையில் தமிழர்களை நோக்கி துப்பாக்கி காட்டிய ‘சிங்கள வீரர்கள்!’

slaf_in_tamilnadu1தைவிட அவமானம் ஒன்று தமிழர்களுக்கு இனி வந்துவிடப் போவதில்லை… இந்திய அரசு தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இரண்டாம் குடிகளாகத்தான் நடத்துகிறதோ என்ற ஆத்திரத்தையும்,

கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது கடந்த இரு தினங்களாக நடந்துவரும் ஒரு சம்பவம்.

சென்னை தாம்பரத்தில் உள்ளது இந்திய ராணுவத்தின் விமானப் படைப் பயிற்சித் தளம். மிகப் பெரிய விமான நிலையத்துடன் கூடிய சர்வதேச தரத்தில் அமைந்த விமான தளம் இது. இங்குதான் இந்திய ராணுவத்தின் விமானப் படையின் முக்கியப் பிரிவுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அப்படித்தான் நாம் நம்பிக் கொண்டிருந்தோம் இத்தனைக் காலமாய்.

இப்போதுதான் தெரிகிறது, இங்கே இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல… தமிழர்களை ஜென்ம விரோதிகளாகக் கருதி வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து வரும் இலங்கை வீரர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறது இந்திய ராணுவம்.

இலங்கையில் வன்னிக் காடுகளில் உயிரைக் கையில் பிடித்தபடி, விடுதலைப் புலிகளுடன் ஓடிக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களைத் தேடிப் பிடித்து குண்டு வீசிக் கொல்வது எப்படி என்ற கொலைக் கலையை அருமையாக போதித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த வேதனை உண்மையை வெளிக் கொணர்ந்தவர்கள் மக்கள் தொலைக்காட்சி மற்றும் தன்னார்வத் தோழர்கள்.

நேற்று செவ்வாய்க்கிழமை இந்த உண்மை தெரிய வந்ததும் அந்தப் பகுதியிலிருந்த தமிழ் உணர்வாளர்களைத் திரட்டிக் கொண்டு தாம்பரம் விமானப் படைத் தளம் நோக்கிச் சென்றுள்ளனர் மக்கள் தொலைக்காட்சிக் குழுவினர்.

‘தாம்பரம் விமானப் பயிற்சி மையத்தில் ஒரு சிங்கள வீரன் கூட இருக்கக் கூடாது, அவர்களை உடனடியாக வெளியேற்றுங்கள்’ என்று கோஷமிட்டனர். இந்தக் காட்சிகளை மக்கள் தொலைக்காட்சிக் குழுவினர் படமாக்க எத்தனித்த போது, கையில் வைத்திருந்த துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியுள்ளனர் அந்த 6 சிங்கள வீரர்களும்.

‘உடனடியாக அங்கிருந்து ஓடிவிடுங்கள்… இல்லையேல் விபரீதமாகிவிடும்’ என இந்திய வீரர்களும் சிங்கள வீரர்களும் எச்சரித்ததால் தங்கள் கையோடு கொண்டுபோயிருந்த செல்போன் கேமரா மூலம் இந்த வீரர்களையும் அவர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டுவதையும் படம் எடுத்துக் கொண்டு திரும்பியுள்ளனர் மக்கள் தொலைக்காட்சியினர்.

இந்தச் செய்தியை அறிந்ததும் பதறிப்போன முதல்வர் கருணாநிதியின் அரசு, அடுத்து செய்ததுதான் உச்சகட்ட நாடகம்.

உடனடியாக அவசர அவசரமாக அறிக்கை ஒன்றைத் தயாரித்து அனைத்து மீடியா செய்தியாளர்களுக்கும் கொடுத்தார் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி.

இதில் அனைத்து சிங்கள வீரர்களும் பயிற்சிக்காக வந்ததாகவும், இதை தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்த்ததால் மத்திய அரசு திரும்பி இலங்கைக்கே அனுப்பிவிட்டதாகவும், இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதிக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும் ஒரு செய்திக் குறிப்பைத் தந்திருந்தார்.

அரசு பொய் சொல்லாது என நம்பிக்கொண்டு விழுந்தடித்துக் கொண்டு பிரசுரித்தார்கள் அனைவரும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். ஆனால் இன்றைய மீடியா யுகத்தில் எட்டுமணி நேரம் கூடத் தாங்காது என்பதை மறந்துவிட்டாரோ ‘பத்திரிகையாளர்’ கலைஞர்?

இந்த வீரர்கள் அனைவரும் ஏதோ இன்று நேற்று வந்தவர்களில்லை. ஏற்கெனவே இந்த தளத்திலும் பெங்களூர் விமானப் படைத் தளத்திலும் முழுமையாகப் பயிற்சிபெற்று, இப்போது அதற்கான சான்றிதழைப் பெறவே வந்துள்ளனர் என்கிறார்கள்.

இத்தனை நாட்கள் தமிழர்கள் கண்களில் மண்ணைத் தூவிட்டு, தமிழ் மண்ணிலேயே அந்த இனவெறியர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளது இந்திய ராணுவம். தமிழகம் கொந்தளித்துக் கிடக்கும் இந்தச் சூழலிலும் இந்த சிங்களர்களை தாம்பரத்துக்கு வரவழைத்துள்ளனர் எனில், இந்தியத் தமிழர்களைப் பற்றிய ‘அன்னை’ சோனியா காந்தி மற்றும் ‘அய்யா’ கலைஞரின் நினைப்பு என்னவென்று புரிகிறதல்லவா…

இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்வது நல்லது…

அரசு சொன்ன மாதிரி இந்த வீரர்கள் யாரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை. பெங்களூரில் ஏலஹங்கா விமானப் பயிற்சி மையத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களாம்.

இந்த உண்மை கசிய வந்ததும், பெங்களூரில் உள்ள தமிழ் இன உணர்வு கொண்டவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அன்னை சோனியாவையும், அய்யா கலைஞரையும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கத் துடித்து, ‘நாற்பதையும்’ சிந்தாமல் சிதறாமல் அள்ளித் தந்த இந்தியத் தமிழன் முகத்தில் செருப்பாலடித்திருக்கிறார்கள்.

பிரமாதம்…!!

-எஸ்எஸ்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.