சுவிற்சர்லாந்து காவல்துறையினரால் கிருஸ்ணா அம்பலவாணர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

krishna-ampalavaanarசுவிற்சர்லாந்தில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுவந்த சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அந்நாட்டு காவல்துறையினர் அவரை வலுக்கட்டயமாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

வன்னியில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முற்பகல் 10:45 மணி முதல் அவர் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை கிருஸ்ணா அம்பலவாணரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தினர்.

எனினும் தனது கோரிக்கைகள் நிறைவேறும்வரை மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சுவிஸ் காவல்துறையின் மருத்துவப் பிரிவினர் அழைக்கப்பட்டனர். சுமார் நான்கு மணிநேரமாக அவரை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல சுவிஸ் காவல்துறை மருத்துவ பிரிவினர் முயன்றபோதும் அது கைகூடவில்லை.

எனவே சம்பவ இடத்திற்கு சுவிஸ் காவல்துறையினர் இரவு 8:00 மணியளவில் வருகை தந்து அவரை வலுக்கட்டாயமாக நேயாளர் காவு ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கிருஸ்ணா அம்பலவாணர் உண்ணாநிலையில் இருந்தபோது அவரை சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியதுடன், தமிழ்மக்களுக்கான இத்தகைய போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுத்துச் செல்லுமாறு அறிவுரை வழங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் அவரை தொடர்புகொண்டு உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடுமாறும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் பேச்சு நடத்தி வருவதாகவும் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.