பிரச்சினை தீர்வுக்கு முடிந்தளவு முயற்சி; ஆனால் புலிகள் மீதான தடையை நீக்க முடியாது: கனடா அறிவிப்பு

canada-flagநீண்டகாலமாகத் தொடரும் இனநெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை தன்னால் முடிந்தளவுக்கு மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள கனடா, இருந்த போதிலும் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்க வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு தான் பணியப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றது.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கனடிய நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழர்கள் கடந்த ஒருவார காலமாக போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

ஐந்து இளைஞர்கள் இங்கு உண்ணாநிலைப் போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையில் கனடா தலையிட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாகக் கருத்துக்கேட்ட போதே கனடாவின் குடிவரவுத்துறை அமைச்சர் காசன் கென்னே, இன நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர எதனையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் விடுதலைப் புலிகள் மீதான தடையை மட்டும் தம்மால் நீக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:

“கனடா செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்ற அனைத்தையும் நாம் செய்திருக்கின்றோம். சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டதை நீக்குமாறு யாராவது கோரினால் அதற்கு நாம் பதிலளிக்க மாட்டோம். அதனைத் தவிர அனைத்தையும் நாம் செய்திருக்கின்றோம்.

இரு தரப்பையும் போர் நிறுத்தம் செய்யுமாறு நாம் கோரியிருக்கின்றோம். உதவி தேவைப்படும் மக்களுக்கு அனைத்துலக உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துமாறும் நாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றோம்.

அதேவேளையில் கனடாவின் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.