புலிகளின் பேச்சுக்கான அழைப்பு மீண்டும் அரசாங்கத்தால் நிராகரிப்பு

sri-lanka-flagநிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொண்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு வர தாம் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாக ஏ.எப்.பி. செய்தி சேவை சுட்டிக் காட்டியுள்ளது.

இது குறித்து ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்திருப்பதாவது:­

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 2 நாள் மோதல் தவிர்ப்பு காலம், இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரண்டு நாள் விடுமுறையாகவே தாம் கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஒரு நிரந்தர போர் நிறுத்தம் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொண்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு வர தாம் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் இந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. தற்போது விடுதøலப் புலிகள் மீள முடியாத தோல்வியைக் கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் எந்த காரணத்திற்காகவும் நிரந்தர போர் நிறுத்தத்தை அறிவிக்கப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு வினவியபோது கருத்து தெரிவித்த பாதுகாப்பு பேச்சாளர், விடுதலைப் புலிகளுடன் எந்த நிலையிலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு செல்லப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை என்ற வசனம் தமது அரசினால் தடை செய்யப்பட்ட வசனமாகவே கருதுவதாக அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியுற்றுப் பலமிழக்கும் வேளையில் தம்மை வலுப்படுத்திக் கொள்ள இவ்வாறு பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.