கனடாவில் 8வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு: 7 வது நாளாக உண்ணா நோன்பு போராட்டம்; உண்ணாவிரதி ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

canadaகனடாவின் தலைநகரமான ஒட்டோவாவில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் முன்பாக ஏப்ரல் 7ம் திகதி தொடங்கி எட்டாவது நாளாக மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று உருவான இன்னல்களின் மத்தியிலும் வெற்றிகரமாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் தமிழீழம் வாழ் மக்களின் உயிர்களைக் காக்க உணர்வுடனும் உறுதியுடனும் உரக்கக் குரல் கொடுத்து கனடிய அரசிடம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டனர்.

நேற்று எமது மக்களின் வருகை குறைந்திருந்தாலும் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். நேற்று காவற்துறையினரால் ஏற்பட்ட இன்னல்களையும் எதிர்கொண்டு இன்று இன்னும் அதிகமான உணர்வுடனும் உறுதியுடனும் எங்கள் மக்கள் போராடினார்கள்.

எந்தத் தடை வந்தாலும் அதை எதிர்கொண்டு போராடும் இனம் தமிழினம் என கடந்த சில நாட்களில் கனடா அரசிற்கும், உலகிற்கும் விளங்கியிருக்கும்.

இன்று ஏழாவது நாளாகத் தொடரும் உண்ணாநோன்பு போராட்டத்தில் கலந்து கொண்ட திரு. ஜுலியஸ் ஜேம்ஸ் அவர்களின் உடல்நலம் பாதிப்புற்று கடுமையான வயிற்று வலியால் ottawa civic வைத்தியசாலையில் அவசர மருத்துவச் சேவையாளர்களால் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் தன்னுடைய உண்ணாநோன்புப் போராட்டத்தைக் கைவிடமாட்டார் என உறுதி கூறினார். எமது உறவுகள் தமது பாதிப்புற்ற உடல் நலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நம்பிக்கை தளராமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனையோரினதும் உடல் பெருதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அடுத்துவரும் நாட்களில் உடல்நிலை மோசமடையலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்

ரொறன்ரோ, ஒட்டாவா, மொன்றியல் ஆகிய கனடியப் பெருநகரங்களிலிருந்து மக்கள் பெருமளவில் இப்போராட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.

கனடிய, தமிழீழக் கொடிகளைத் தாங்கி நிற்கும் அவர்கள், உடனடிப் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை கனடிய அரசு உடன் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கோசங்கள் எழுப்பயவண்ணம் உள்ளனர்.

இரவுபகலாக கவனயீர்ப்பு முற்றுகையை தெடர்ந்து எட்டு நாட்கள் மேற்கொண்டுவருவது கனடியத் தலைநகர் மக்களையும், செய்தி ஊடகங்களையும் பெரும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஏழாவது தொடர் நாளாக கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணா நோன்பு மேற்கொண்டுவரும் அறுவரின் நிலைமையையும் மக்களின் உறுதியான போராட்ட முன்னெடுப்பையும் கனடிய ஊடகங்கள் தொடர்ந்தும் ஒலி-ஒளி பரப்பியும் பிரசுரித்தும் வருகின்றன.

மக்களின் உறுதியான தொடரும் போராட்டம் கனடிய அரசியல் வட்டாரங்களில் ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைமைகள் ஈழத்தமிழர் விடயத்தில் அதீத கரிசனை வெளிப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயக உறவுகளின் தற்போதைய அவல வாழ்வில் முழுமையான மாற்றம் ஏற்படும்வரை அதற்கான உறுதியான செயற்பாட்டை கனடிய அரசு எடுக்கும் வரை தமது உறுதியான போராட்ட முன்னெடுப்பு தொடரும் என கனடியத் தமிழ் மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.