மக்கள் கொல்லப்படுவது பிரச்சினைக்குத் தீர்வாகாது : அமெ. ராஜாங்க திணைக்களப் பேச்சாளர் றொபேர்ட் வூட்

robert-wood_1வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர்நிறுத்தம் ஒன்றுக்குச் செல்லவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

பொதுமக்கள் தப்பிச் செல்லக்கூடிய வகையில் உடனடியாக மோதல் நிறுத்தமொன்று ஏற்படுத்தப்படவேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவென ஏற்படுத்தப்பட்ட வலயங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென்றும் அத்துடன் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களைச் சென்று பார்வையிட சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது உதவி அமைப்புகள் முகாம்களுக்குச் சென்று செயற்படுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வு காணும் வாய்ப்பொன்று இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கின்றது என்றும் றொபேர்ட் வூட் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் றொபேர்ட் வூட் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.