இந்திய மத்திய அரசிடம் கூட்டமைப்பு 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு

tnaஇந்திய மத்திய அரசிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்திய அரசின் அழைப்பையேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவினர், டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் உரையாடினர்.

இலங்கையில் தொடரும் மோதல்கள், மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் பேச்சு நடத்தும் பொருட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் புதுடில்லி விரைந்ததுடன் புதனன்று மாலை இந்திய மத்திய வெளியுறவுத்துறைச் செயலர் எஸ்.எஸ். மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரைச் சந்தித்து நிலைமையை விளக்கியதுடன், இந்திய மத்திய அரசு உடனடியாக இலங்கை விவகாரத்தில் தலையிட்டு போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

அதேவேளை, நேற்று முன்தினம் மாலை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மத்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்துப் பேசிய பின்னர் கூட்டமைப்பு சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் தகவல் தருகையில்,

“தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுடன் நடந்த சந்திப்பின்போது மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினோம். முதலாவதாக இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் இராணுவ தாக்குதல்களை நிறுத்துமாறு இலங்கையை இந்தியா உடனடியாக வலியுறுத்த வேண்டும். இரண்டாவதாக போர் நடைபெறாத பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள 2 லட்சம் தமிழர்களைப் பாதுகாக்க, அந்தப் பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். அதேவேளை, இன்று 17ஆம் திகதி இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்து, இலங்கையில் நிலவும் உண்மையான நிலவரம் குறித்து அவர்களிடம் விளக்கமாகப் பேட்டி அளிக்க உள்ளோம்” என்று மேலும் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.