தமிழீழ தனி அரசு ஏற்படுவதற்கு அ.தி.முக ஆதரவளிக்கும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிப்பு

jeyalalitha_இலங்கையில் தமிழீழ தனி அரசு ஏற்படுவதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஜெயலிலிதா தலைமையிலான அ.தி.மு.க அறிவித்துள்ளது. நேற்று இரவு வெளியிட்பட்ட அந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருமாறு தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் எனினும் அதற்கு இலங்கை அரசாங்கம் இணங்க மறுத்தால் அங்கு தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை தமது கட்சி முன்னெடுக்கும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆரம்பித்துள்ள தேர்தல்களில் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை தீர்மானிக்கும் களமாக தமிழகம் மாறியுள்ளது.

தமிழக மக்கள் தனித் தமிழீழம் அமைவதற்கு ஆதரவளிக்கும் கட்சியினை இம்முறை தெரிவு செய்வார்கள் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு திமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்து வந்த ஜெயலிதா தனது நிலைப்பாட்டை தேர்தல் வெற்றிகளை நோக்கமாக கொண்டு மாற்றியமைத்துள்ளதாகவும் எனினும் இதனை அவர் தேர்தல் வெற்றியின் பின்னர் நிறைவேற்றுவாரா என்பது சந்தேகத்திற்குரியதே என்றும் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கலைக்கப்படுவதன் மூலம் இலங்கை தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவராக தன்னை காட்டிக் கொண்டு தமிழ் மக்களின் மீதான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைக்கு மறைமுக ஆதரவும் அங்கீகாரமும் வழங்கி வரும் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்படுவது சாதகமான முடிவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.