ஈழப்பிரச்சனையில் காங்கிரசுடனான உறவை முறித்துக்கொள்ள திமுக தயாரா? ராமதாஸ் கேள்வி

tblarasiyalnews_7001459599போரை நிறுத்தாவிட்டால் இலங்கையுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று தந்தி அனுப்பியுள்ள கருணாநிதி, அவ்வாறு மத்திய அரசு செய்யாவிட்டால் காங்கிரசுடனான உறவை திமுக முறித்துக்கொள்ளுமா என்றும் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் டி.ஆர்.ராமகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக இன்று கோவை வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக பாமக மீது முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது:

இலங்கை தமிழர் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி, பாமகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த பிரச்சனையில் பாமக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட வில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். அப்படியானால் முதல்வர் இந்த பிரச்சனையில் ஏதாவது பெரிய மலையை நகர்த்தி வைத்துவிட்டாரா?

இந்தியாவின் அறிவுரையை ஏற்று போரை இலங்கை அரசு நிறுத்தா விட்டால்  அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கூறி கருணாநிதி இப்போது தந்தி அனுப்பியுள்ளார்.  அப்படி இவர் கூறியிருப்பதுபோல இலங்கையுடனான உறவுகளை முறித்துக்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியுடனான உறவை திமுக முறித்துக்கொள்ளுமா? அதற்கு கருணாநிதி தயாரா?

அதிமுக கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்று கூறி வருகின்றன. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் இது பற்றி தெளிவாக எதுவும் கூறவில்லை. இலங்கை தமிழர்களின்  உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று மட்டும் கூறியிருக்கிறார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்ததாக கருணாநிதி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் உண்மை அதுவல்ல. 1976 ம் ஆண்டு இவர் ஆட்சியை இழந்தது ஊழல் காரணங்களுக்காகவே. அதற்கடுத்த முறை 1991 ம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காகத்தான் இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் இதை மறைத்துவிட்டு கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சியை இழந்ததாக பேசி வருகிறார்.

எனது மகன் அன்புமணியைப் பற்றியும் கருணாநிதி பேசி வருகிறார். இலங்கை தமிழர் பிரச்சனைக்காக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அன்புமணி குரல் கொடுத்தாரா என்று கேட்கிறார்கள். வெளியுறவு கொள்கை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் எப்படி கேள்வி கேட்க முடியும். பாமக மீது பழிபோடுவதே கருணாநிதிக்கு வேலையாக போய்விட்டது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.