பொதுமக்கள் வெளியேறுவதை புலிகள் தடுக்கவில்லை: ஐ.நா

unloஇலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதை தாங்கள் தடுப்பதில்லை என விடுதலைப்புலிகள் தெரிவித்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோம்ஸ் தெரிவித்துள்ளார் என புலிகளின் ஆதரவு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது, இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோதல் நடைபெறும் பகுதியில் உள்ள மக்கள் தொடர்பாக நான் விடுதலைப் புலிகளுடன் கடந்த சில வாரங்களாக தொடர்புகள் மேற்கொண்டிருந்தேன். அப்போது தாங்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை தடுத்து வைக்கவில்லை என விடுதலைப் புலிகள் தெளிவாக தெரிவித்தனர்.

தமது பகுதிகளுக்கு மக்கள் விருப்பத்துடனே வந்து தங்கியுள்ளனர் எனவும் அவர்கள் அந்தப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்தமக்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

நார்வேயை அமைதி முயற்சிகளின் அனுசரணையாளர் பணியில் இருந்து இலங்கை அரசு வெளியேற்றியது ஒரு உபயோகமான நடவடிக்கை அல்ல. ஆனால் அரசின் இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுடன் நார்வே பேசுவதை தடுக்காது.

ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியேறுவதற்கு 2 நாள் போர்நிறுத்தம் போதுமானது அல்ல. அங்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் உதவி அமைப்புக்களை சேர்ந்தவர்கள் செல்வதற்கும் இந்த கால அவகாசம் போதுமானதல்ல.

அரசின் போர்நிறுத்த காலத்தில் மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான மக்களே வெளியேறியுள்ளனர். தெற்காசிய தீவின் கடற்கரையில் பேரழிவு ஏற்படும் சாத்தியங்களே அதிகம் உள்ளன.

விருப்பத்துடன் வெளியேறும் மக்களை விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும். கனரக ஆயுதங்களை பொதுமக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பான பிரதேசத்தின் மீது பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதிகளை இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும். அதனால் தான் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன என்று ஜோன் கோம்ஸ் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.