பிரித்தானிய ஊடகவியலாளர் இலங்கை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்

jeremypagephotoபிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த வாரம் இலங்கை சென்ற நிலையில் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  கட்டுநாயக்க தடுப்பு அறையில் அன்றைய இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டு அடுத்த நாள் திருப்பி அனுப்பபட்டுள்ளதாக  டைம்ஸ் ஒன்லைன் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செய்தி சேகரிப்பதற்கான வீசா அனுமதி நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர், சுற்றுலா வீசா அனுமதியை பெற்று  இலங்கைக்குள் செல்ல முயற்சித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் தனது பெயரை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாகவும், கடந்த 26 வருட சிவில் யுத்தத்தில் தனக்கு இரண்டு தரப்பிலுமே தனிப்பட்ட ரீதியிலான தொடர்புகள் கிடையாது என ஊடகவியலாளர் ஜெர்மி பேஜ் தெரிவித்துள்ளார்.
 
சுமார் இரண்டு வருடங்களாக, மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு சுதந்திரமான ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இராணுவத்தினரால், கடந்த ஜனவரியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக பயணத்தில் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு தணிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் ஊடகவியலாளர்கள் மிகவும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

 
 வன்முறையான மோதல்கள் தொடர்பான செய்தி சேகரிப்பில் தான் ஈடுபட்டதுடன்  ஆப்கானிஸ்தானின் தாலிபான் மற்றும் ரஷ்யாவின் செச்சினியாவில் இரண்டு தரப்பினரிடமும் தாம் செய்திகளை சேரித்துள்ளதாக பேஜ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  சீனாவில் தீபேத்திய சுதந்திர செயற்பாட்டாளர்களையும் அதனுடன் முரண்பட்டவர்களையும் தான் செவ்வி கண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் இரண்டு தரப்பினரினதும் கருத்துக்களை பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு ஊடகவியலாளர் எனில் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாகும் எனவும் ஜெர்மி பேஜ் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.