சுவிசில் பல்லின மக்களுடன் இணைந்து தமிழர்கள் பேரணி; ஊர்திகளில் இளையோர் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்

swiss_20090419001சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இனவாதத்துக்கு எதிரான SOS அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் தமிழர்களும் கலந்துகொண்டதுடன் சூரிச் நகரில் இளையோர்கள் ஊர்திகளில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

இனவாதத்துக்கு எதிரான SOS அமைப்பின் ஏற்பாட்டில் முப்பதுக்கும் அதிகமான அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இனவாத எதிர்ப்பு ஊர்வலம் நேற்று சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தமிழ் மக்கள் உட்பட சுமார் 1,500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

பிற்பகல் 3:00 மணிக்கு Palace Neuvu எனும் இடத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஜெனீவாவின் முக்கிய பாதைகள் ஊடாக சென்று Place des Navigation எனும் இடத்தில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் பல்வேறு பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.

வன்னியில் மக்கள் படும் அவலத்தை சித்தரிக்கும் பதாகைகளையும் தமிழீழத் தேசியக் கொடிகளையும் தாங்கியிருந்தனர்.

ஊர்வல முடிவில் அமைப்பின் SOS தலைவர் கார்ல் குறூன்பேர்க தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயமும் உரையாற்றினார்.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை பல்லின பல சமூக மட்டத்தில் எடுத்துச் செல்லும் அரியவாய்ப்பு கிட்டியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24.04.09) சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஜெனீவாவில் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற ஏற்பாடாகியிருக்கின்றது.

பிற்பகல் 2:00 மணி தொடக்கம் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து ஐ.நா. முன்றல் வரை இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.

மனிதச் சங்கிலிப் போராட்டத்தை தொடர்ந்து ஐ.நா. முன்றலில் பொதுக்கூட்டமும் நடைபெறவிருப்பதால் மக்களை அணிதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

ஊர்திகளில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழினப் படுகொலையை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து தமிழ் இளையோர்கள் சூரிச்சில் நேற்று ஊர்திகளில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஊர்திகளில் தமிழீழ தேசியக் கொடிகளை பறக்கவிட்டவாறும் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஒட்டியவாறும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா அரசு இனப்படுகொலை நிறுத்த வேண்டும் என்பது மட்டுமன்றி சிறுவர்கள் மீதான படுகொலையை நிறுத்தக் கோரியும் பதாகைகளை தாங்கியவாறும் ஊர்த்திகள் பிராதான சாலைகள் ஊடாக சென்றது.

அத்துடன், சுவிசின் அரச தொலைக்காட்சி நிலையத்திற்கும் சென்று இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைகள் சார்ந்த விடயங்களை ஒளிபரப்புமாறும் கேட்டுக்கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.